ஐபிஎல் 2025 தொடரில் மே 19ஆம் தேதி லக்னோவில் 61வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ 20 ஓவரில் 205/7 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 65, ஐடன் மார்க்ரம் 61, நிக்கோலஸ் பூரான் 45 ரன்கள் எடுத்தார்கள்.
ஹைதெராபாத்துக்கு அதிகபட்சமாக எஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய ஹைதராபாத் அணிக்கு அதர்வா டைட் அதிரடியாக விளையாட முயற்சித்து 13 (9) ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஆனால் மறுபுறம் அபிஷேக் ஷர்மா அடித்து நொறுக்கி வெறும் 18 பந்தில் 50 ரன்கள் கடந்தார்.
சரவெடி சாதனை:
அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்துக்காக 3வது வேகமான அரை சதத்தை அடித்த வீரராக அவர் சாதனையும் படைத்தார். தொடர்ந்து அசத்தலாக விளையாடிய அவர் 4 பவுண்டரி 6 சிக்ஸருடன் 59 (20) ரன்களை 295 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார். இதையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் அவர் 4 முறை 250க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் 4 அரை சதங்கள் அடித்துள்ளார்.
இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 250+ ஸ்ட்ரைக் ரேட்டில் அதிக (4) அரை சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சரவெடி சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் பொல்லார்ட், நிக்கோலஸ் பூரான் மட்டுமே அந்த சாதனையை படைத்துள்ளார்கள். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்து வந்த இஷான் கிசான் அதிரடியாக விளையாடி முக்கியமான 35 (28) ரன்கள் எடுத்தார்.
சாதனை சேசிங்:
அவருடன் சேர்ந்து விளையாடிய ஹென்றிச் க்ளாஸென் அதிரடியாக 47 (28) ரன்கள் எடுத்தார். இறுதியில் கமிண்டு மெண்டிஸ் 32 (21) ரன்கள் எடுத்த உதவியுடன் 18.2 ஓவரிலேயே 206/4 ரன்களை எடுத்த ஹைதராபாத் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் வாயிலாக லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் ஐபிஎல் தொடரில் 200+ இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணியாக ஹைதராபாத் சாதனை படைத்தது.
இதையும் படிங்க: லக்னோ 205 ரன்ஸ்.. 27 கோடி பண்ட் 14 வருட மோசமான சாதனை.. மலிங்காவை முந்தி ஹர்ஷல் அபார சாதனை
ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய ஹைதராபாத் இதையும் சேர்த்து 8 போட்டிகளில் 4வது ஆறுதல் வெற்றியை பெற்றது. அத்துடன் லக்னோ அணியையும் நாக் அவுட் செய்து ஹைதராபாத் தங்களுடன் வீட்டுக்கு அழைத்துச் சென்றது. ஏனெனில் 12 போட்டிகளில் 7வது தோல்வியை பதிவு செய்த லக்னோ ரிஷப் பண்ட் தலைமையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் ஆறுதல் வெற்றியைக் கூட பெற முடியவில்லை.



