ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 25ஆம் தேதி இரவு 7.330 மணிக்கு தலைநகர் டெல்லியில் 68வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் கொல்கத்தாவுக்கு எதிராக பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் 20 ஓவரில் பட்டாசான பேட்டிங்கை வெளிப்படுத்தி 278/3 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஹென்றிச் க்ளாஸென் 37 பந்தில் சதத்தை அடித்து 105* (39) ரன்களை வெளுத்து வாங்கினார். அவருடன் டிராவிஸ் ஹெட் 76, அபிஷேக் சர்மா 36 ரன்கள் அடித்து ஹைதராபாத் அணி 3வது அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோரை பதிவு செய்ய உதவினார்கள். கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக சுனில் நரைன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
ஹைதராபாத் வெற்றி:
அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா எதிர்பார்த்ததை போலவே அதிரடியாக விளையாட முயற்சித்தது. ஆனால் ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 18.4 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சுனில் நரேன் 31, ஹர்ஷித் ரானா 34, மனிஷ் பாண்டே 37 ரன்களை எடுத்தார்கள்.
அதனால் 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஹைதராபாத் அணிக்கு அதிகபட்சமாக உனட்கட், எஷன் மலிங்கா, ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இதையும் சேர்த்து 6வது ஆறுதல் வெற்றியைப் பெற்ற ஹைதராபாத் இத்தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்தது. அத்துடன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த அணியாக ஹைதராபாத் சாதனை படைத்தது.
சாதனை வெற்றி:
இதற்கு முன் 2018 ஐபிஎல் தொடரில் மும்பை அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்ததே முந்தைய பெரிய வெற்றியாகும். அத்துடன் ஒட்டுமொத்தமாக ஹைதராபாத் தங்களுடைய 2வது பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. அதனால் 2024 ஐபிஎல் ஃபைனல் தோல்விக்கு கொல்கத்தாவை அந்த அணி பழிதீர்த்தது என்றும் சொல்லலாம்.
இதையும் படிங்க: 278 ரன்ஸ்.. 37 பந்தில் 100.. கொல்கத்தாவை பொளந்த க்ளாசென்.. மில்லரின் 12 வருட சாதனையை தூளாக்கி மாஸ் சாதனை
மறுபுறம் நடப்புச் சாம்பியனாக களமிறங்கிய கொல்கத்தா படுதோல்வியை சந்தித்தது. இதையும் சேர்த்து 14 போட்டிகளில் கொல்கத்தா 7வது தோல்வியை சந்தித்தது. அதனால் புள்ளிப்பட்டியலில் அந்த அணி 7வது இடத்திற்கு சரிந்து இத்தொடரை மோசமாக முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



