கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சூதாட்ட பிரச்சனையில் சிக்கி ஆயுட்கால தடை பெற்ற கேரள மாநிலத்தை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் தன் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை மேல்முறையீடு செய்து தான் குற்றமற்றவர் என்று நிரூபித்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் கிரிக்கெட்டில் பங்கேற்க அனுமதியைப் பெற்றார். மேலும் கேரள மாநிலத்திற்கு அண்மையில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி தொடரில் மீண்டும் களம் இறங்கி விளையாடினார்.
மேலும் ஐபிஎல் தொடரிலும் இந்திய அணியிலும் இடம் பிடிப்பதற்காக ஸ்ரீசாந்த் ஆவலாக இருந்தார். சையது முஷ்டாக் அலி தொடரில் 18 ஓவர்கள் வீசிய அவர் 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட ஓவருக்கு பத்து ரன்களையும் விட்டுக் கொடுத்ததால் அவருடைய பவுலின் திறன் பழையபடி இல்லை என்று அனைவரும் கூறிவருகின்றனர்.
ஏற்கனவே தடையில் இருந்து மீண்ட ஸ்ரீசாந்த் தான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அதன்மூலம் நிச்சயம் தேசிய அணியில் மீண்டும் இடம் பிடித்து விளையாட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக இடத்திலும் தன் பெயரை அவர் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் தற்போது கடந்த வாரம் ஐபிஎல் நிர்வாகத்தால் பெறப்பட்ட 1097 வீரர்களின் பட்டியலில் இருந்து தற்போது இறுதிகட்டமாக 292 வீரர்கள் அடங்கிய பட்டியலை ஐபிஎல் குழு தயாரித்து அவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்பார்கள் என்று கூறியுள்ளது. இந்த இறுதிப்பட்டியலில் ஸ்ரீசாந்தின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ஐபிஎல் இல் விளையாடும் கனவுடன் இருந்த ஸ்ரீசாந்த் தற்போது விளையாட முடியாமல் போகி உள்ளது.
மேலும் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டாததால் அவர் இந்த பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 87 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.