ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் காயத்தை சந்தித்து வெளியேறியுள்ளார். ஹைதராபாத் அணியில் 150 கி.மீ வேகத்தில் தொடர்ந்து பௌலிங் செய்த அவர் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஆனால் அந்த வாய்ப்பில் நல்ல லைன், லென்த் ஆகியவற்றைப் பின்பற்றாமல் வேகத்தை மட்டுமே நம்பி பவுலிங் செய்த அவர் ரன்களை வாரி வழங்கினார்.
அதற்கிடையே காயத்தையும் சந்தித்ததால் 10 ஒருநாள் 8 டி20 போட்டிகளுக்கு மேல் அவரால் இந்திய அணியில் விளையாட முடியவில்லை. இந்நிலையில் மீண்டும் உம்ரான் மாலிக் வெற்றிகரமாக செயல்படுவதற்கு தேவையான ஆலோசனைகளை முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். இது பற்றி ஜியோ ஸ்டார் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “எனது காலங்களில் ஃஎம்ஆர்எப் பேஸ் அகடமியில் காயங்களை சமாளிக்க வலுவான செயல்முறைகளை பெற்றோம்”
பழசை மறங்க:
“களத்தில் வெளிப்படுத்தும் முயற்சிகளைப் போல களத்திற்கு வெளியே வெளிப்படுத்தும் முயற்சிகளும் முக்கியம் என்று சச்சின் டெண்டுல்கர் பாஜி சொல்வார். இந்த தலைமுறையில் நிறைய கவனச் சிதறல்கள் இருக்கிறது என்பதில் கேள்வியில்லை. எனவே நீங்கள் எது செய்தாலும் பயிற்சியை தவற விடாதீர்கள். நீங்கள் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சிகளை எடுத்து களத்தில் விளையாடுவதால் மட்டும் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கக்கூடாது”
“உங்களுக்கு ஒரு கட்டமைக்கப்பட்ட வழக்கம் தேவை. ஐபிஎல் தொடராக இருந்தாலும் சரி மக்கள் தொடராக இருந்தாலும் சரி இந்தியாவில் போட்டிக்கு அபாரமான திறமைகளை இருக்கிறது. உம்ரான் மாலிக் சிறப்பான வீரர் அற்புதமான திறமையை கொண்டவர். மேட்ச் ஃபிட்னெஸ் தான் சிறப்பாக செயல்படுவதற்கான சாவியாகும்”
ஸ்ரீசாந்த் ஆலோசனை:
“நீங்கள் தொடர்ச்சியாக விளையாட வேண்டும். பயிற்சிகளை எடுப்பது மட்டும் நல்ல முடிவுகளைக் கொண்டு வராது. ஒவ்வொரு பந்தையும் 150 கி.மீ வேகத்தில் வீச முயற்சிப்பதை விட எப்போது வேகமாக வீச வேண்டும் என்பது உங்களுக்கு தெரிவது அவசியம். நீங்கள் எவ்வளவு அதிகமாக பௌலிங் செய்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக முன்னேற்றத்தை சந்திப்பீர்கள் என்று கபில் தேவ் பாஜி எப்போதும் சொல்வார்”
இதையும் படிங்க: என் கையில எதுவுமே இல்ல.. எல்லாம் அவங்களோட முடிவு தான்.. சாம்பியன்ஸ் டிராபி நீக்கம் குறித்து பேசிய – முகமது சிராஜ்
“முட்டாள்தனத்திற்கும் தைரியத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உம்ரான் மாலிக் புரிந்து கொள்ள வேண்டும். எப்போதும் தைரியமாக இருந்து எந்தப் பயிற்சியையும் கைவிடாதீர்கள் என்று ஃஎம்ஆர்எப் பவுண்டேஷனில் ராம்ஜி சார் சொல்வார். இதுவே அவருக்கு என்னுடைய ஆலோசனையாகும். கடந்த காலத்தை மறந்து விட்டு புதிய நாளில் கவனம் செலுத்துங்கள். உம்ரான், மயங் யாதவ் போன்ற பவுலர்கள் என்னுடைய நாட்டுக்காக வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்” என்று கூறினார்.