ஆடவரை மிஞ்சி வரலாறு படைத்த மகளிரணி, கொண்டாடும் தெ.ஆ – அசுரனை வீழ்த்தி சரித்திரம் படைக்குமா?

RSA Womens
- Advertisement -

சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 8வது முறையாக தென்னாபிரிக்காவில் கோலாகலமாக துவங்கி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி துவங்கிய இத்தொடரில் நடப்பு சாம்பியன், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இந்தியா உள்ளிட்ட உலகின் டாப் 16 கிரிக்கெட் அணிகள் போட்டியிட்டன. அதில் முதல் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கிய ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் மீண்டும் சொதப்பி கையில் வைத்திருந்த வெற்றியை தாரை வார்த்து பரிதாபமாக வெளியேறியது.

மறுபுறம் சொந்த மண்ணில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அந்த நிலைமையில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 164/4 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீராங்கனைகள் லாரா வால்வர்ட் 53 (44) ரன்களும் பிரிட்ஸ் 68 (55) ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் சோபி எக்லஸ்டன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

சரித்திரம் படைக்குமா:
அதை தொடர்ந்து 165 ரன்கள் துரத்திய வலுவான இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடியாக ரன்களை சேர்க்க முடியாத அளவுக்கு தென்னாப்பிரிக்கா நேர்த்தியாக பந்து வீசியது. குறிப்பாக டேனியல் வைட் 34 (30) டுங்லி 28 (16) நட் ஸ்கீவர் 40 (34) கேப்டன் ஹீதர் நைட் 31 (25) என முக்கிய வீராங்கனைகள் நல்ல தொடக்கத்தை பெற்றாலும் அதை பெரிய ரன்களாக மாற்றாமல் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தனர். அதனால் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட போது இங்கிலாந்து 6 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 158/8 ரன்களுக்கு அந்த அணியை கட்டுப்படுத்த தென் ஆப்பிரிக்கா வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக அயபோங்கா காகா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதன் வாயிலாக 2023 ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பைக்கு முன்னேறியுள்ள தென் ஆப்பிரிக்கா பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. பொதுவாக ஐசிசி உலக கோப்பைகள் துவங்கிய நாள் முதல் பெரும்பாலும் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் தென்னாப்பிரிக்கா எப்போதாவது சிறப்பாக செயல்பட்டால் குறுக்கே மழை வந்து தடுத்து விடுவது அந்த காலம் முதல் இந்த காலம் வரை வாடிக்கையாகி வருகிறது.

- Advertisement -

அதையும் தாண்டி அசத்தும் பட்சத்தில் நாக் அவுட் சுற்றில் முக்கிய நேரத்தில் சொதப்பும் தென்னாபிரிக்கா கையில் வைத்திருக்கும் வெற்றியை எதிரணிக்கு தாரை வைப்பது வழக்கமாகும். அதனால் இதுவரை ஆடவர் ஐசிசி தொடர்களில் ஒரு முறை கூட பைனலுக்கு கூட தகுதி பெறாத தென்னாப்பிரிக்காவை கிரிக்கெட்டின் சோக்கர் என்று வல்லுனர்களும் ரசிகர்களும் அழைத்து வருகிறார்கள்.

ஆனால் அவை அனைத்திற்கும் விதிவிலக்காக இந்த தொடரில் அபாரமாக செயல்பட்ட தென்னாபிரிக்க மகளிர் அணியினர் முதல் முறையாக ஒரு ஐசிசி உலக கோப்பையின் பைனலுக்கு தகுதி பெற்று மோசமான வரலாற்று கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அந்த வரலாற்றை படைத்த காரணத்தால் உணர்ச்சிகள் கட்டுப்படுத்த முடியாத தென்னாப்பிரிக்க மகளிர் அணியினர் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

மொத்தத்தில் தங்களால் முடியாத பைனல் கனவை முதல் முறையாக தொட்டுள்ள தென்னாபிரிக்க மகளிர் அணியினரை ஏபி டீ வில்லியர்ஸ், கிரேம் ஸ்மித் உள்ளிட்ட ஏராளமான முன்னாள் இந்நாள் தென்னாப்பிரிக்க ஆடவர் அணியினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இருப்பினும் பைனலில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தால் தான் இந்த மொத்த உழைப்பின் பயன் கிடைக்கும் என்றே சொல்லலாம்.

ஆனால் வரலாற்றில் இதுவரை நடைபெற்றுள்ள 8 மகளிர் டி20 உலக கோப்பைகளில் 5 கோப்பைகளை வென்று நடப்புச் சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியா இந்த தொடரில் கூட இதே தென்னாப்பிரிக்காவை லீக் சுற்றில் தோற்கடித்துள்ளது. மேலும் வரலாற்றில் இதுவரை ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட 6 டி20 போட்டிகளிலும் தென்னாபிரிக்க மகளிரணி தோற்றுள்ளது.

இதையும் படிங்க: வீடியோ : அதிரடி சிக்ஸரை பறக்க விட்ட நியூசி கேப்டன் – எம்எஸ் தோனியின் ஆல் டைம் சாதனையை சமன் செய்து அபாரம்

அதனால் இம்முறையும் ஆஸ்திரேலியா வெல்வதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகிறது. ஆனால் ஏற்கனவே ஒரு மோசமான வரலாற்றை உடைத்து புதிய சாதனை படைத்துள்ள தென்னாப்பிரிக்கா சொந்த மண்ணில் சொந்த ரசிகர்கள் ஆதரவுடன் அசுரன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து முதல் கோப்பையை வென்று புதிய சாதனை படைக்குமா என்பதே ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement