ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஆசிய கோப்பை ஆகஸ்ட் 30ஆம் தேதியும் உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை நிர்ணயிக்கும் 2023 ஐசிசி உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதியும் துவங்குகிறது. அதில் குறிப்பாக ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சொந்த மண்ணில் 2011 போல உலகக்கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இருப்பினும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வலுவாக இல்லை, மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லை போன்றவை பின்னடைவை ஏற்படுத்துகிறது.

மேலும் முதன்மையான வீரர்கள் இன்னும் முழுமையாக காயத்திலிருந்து குணமடையவில்லை போன்ற பல அம்சங்கள் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. ஆனால் இந்த அனைத்து குறைகளையும் சரி செய்து வெற்றிக்காக போராட இந்திய கிரிக்கெட் அணி இறுதிக்கட்டமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் இருதரப்பு தொடர்களில் அசத்தும் இந்தியா அனைத்து உலகக்கோப்பைகளையும் வெல்ல முடியாது என்று கேப்டன் சௌரவ் கங்குலி நிதர்சனத்தை பேசியுள்ளார்.
கங்குலியின் ஆதங்கம்:
ஆனால் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முழுக்க முழுக்க உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்டுள்ள இந்திய அணி குறைந்தபட்சம் 50% ஐசிசி தொடர்களில் வெற்றிக்கான தகுதியை கொண்டிருந்தும் அதை சாதிப்பதில்லை என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “குறைந்தபட்சம் நம்முடைய அணி தொடர்ந்து ஃபைனலுக்கு தகுதி பெறுவது வரவேற்கத்தக்க விஷயமாகும். தற்போது பயிற்சியாளராக இருக்கும் டிராவிட் மற்றும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்களுக்கு நாக் அவுட் போட்டிகளில் எப்படி வெல்ல வேண்டும் என்பது தெரியும்”

“இருப்பினும் ஐசிசி தொடர்களில் எல்லா நேரத்திலும் வெல்ல முடியாது. ஆனால் நம்மால் குறைந்தபட்சம் 50% வெல்ல முடியும். எனவே தற்போதைய நிலைமையில் ராகுல் டிராவிட் பயிற்சியை பற்றி நான் மதிப்பிட விரும்பவில்லை. இவை அனைத்தையும் உலகக்கோப்பை முடிந்த பின் பார்ப்போம். அவருக்கு இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படுவதற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரிடம் இம்முறை கோப்பையை நெருங்குவதற்கு தேவையான அணி இருக்கிறது”
“சொல்லப்போனால் ஒரு வீரராக உலகக் கோப்பைகளை சிறப்பாக செயல்பட்ட ராகுல் டிராவிட்டுக்கு எப்படி செயல்பட வேண்டும் என்பது நன்றாக தெரியும். எனவே அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். மேலும் உலக கோப்பைக்கு முன்பாகவும் பின்பாகவும் நீங்கள் எந்த மாதிரியான செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறீர்கள் என்பது முக்கியமல்ல. மாறாக உலகக்கோப்பை வெற்றி என்பது அன்றைய நாளில் நீங்கள் எந்த மாதிரியான செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்ததாகும்”

“எனவே இந்த செய்தியை நமது வீரர்களிடம் டிராவிட் சொல்வார் என்று நம்புகிறேன். இப்போதைக்கு அவர்கள் ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளனர். அதுவே வெற்றி பெறுவதற்கான நல்ல பயிற்சியாக இருக்கும்” என்று கூறினார். மேலும் நம்பர் 4வது இடத்தில் யார் விளையாடினாலும் பிரச்சனை இல்லை என்று தெரிவிக்கும் அவர் தாமாக இருந்திருந்தால் சஹாலை ஆசிய கோப்பை அணியில் தேர்வு செய்திருப்பேன் என கூறியுள்ளார்.
அத்துடன் ரோகித் சர்மா உலகக்கோப்பை வெல்லாவிட்டாலும் தொடர்ந்து விளையாடுவதற்கு தகுதியானவர் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “இந்தியா நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தி பெரிய ரன்கள் அடிக்க வேண்டும். மேலும் நான் சஹால் போன்ற மணிக்கட்டுப் ஸ்பின்னர்களையே தேர்ந்தெடுப்பேன். இங்கே யாருமே நம்பர் 4வது இடத்தில் விளையாடுபவர் என்று பிறப்பதில்லை. விராட், ஸ்ரேயாஸ், ராகுல் ஆகியோர் 4வது இடத்தில் விளையாடக் கூடியவர்கள்”

இதையும் படிங்க:IND vs IRE : அயர்லாந்து அணிக்கெதிரான நாளைய போட்டியில் கேப்டன் பும்ராவிற்கு ஓய்வு – புதிய கேப்டன் யார் தெரியுமா?
“நான் கேப்டனாக இருந்த போது யுவராஜ் 6வது இடத்தில் விளையாடினார். பின்னர் தோனி தலைமையில் அவர் 4வது இடத்தில் விளையாடினார். ஆனால் 2011 உலகக்கோப்பை ஃபைனலில் தோனி 4வது இடத்தில் விளையாடி வென்று கொடுத்தார். ரோகித் சர்மா, விராட், ஷமி, சிராஜ், பும்ரா போன்றவர்கள் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் நாங்கள் விரும்பும் வரை விளையாட தகுதியானவர்கள்” என்று கூறினார்.



