மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றளவும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அன்பிற்காகவும் பாசத்திற்காகவும் தொடர்ந்து விளையாடி வருவதாக தோனி ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறும் போதும் அவரது ஓய்வு எப்போது? என்பதே கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக முக்கிய கேள்வியாக இருந்து வருகிறது.
தோனியின் ஓய்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த : சவுரவ் கங்குலி
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது கூட உங்களுடைய ஓய்வு எப்போது? என்று தோனியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் : அடுத்த ஐபிஎல் தொடருக்கு ஒரு ஆண்டு இருக்கிறது என்றும் அதுவரை தனது உடற்தகுதி சரியாக இருந்தால் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாடுவேன் என்று தெரிவித்திருந்தார். அந்த வகையில் இந்த 2026 ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணியில் இடம் பெற்று பயிற்சி செய்து வரும் அவர் இந்த தொடரிலும் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.
ஆனாலும் தற்போது 44 வயதாகியுள்ள தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடர் என்றும் இந்த தொடருக்கு பின்னர் நிச்சயம் தோனி ஓய்வு முடிவினை அறிவித்து விடுவார் என்றும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டுள்ளார் என்றும் தோனிக்கு அடுத்து சென்னை அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் அவரது இடத்தை நிரப்புவார் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் தோனியின் ஓய்வு முடிவு குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் இந்திய அணியின் கேப்டனான சவுரவ் கங்குலி ஒரு சுவாரஸ்யமான பதிலை அளித்திருக்கிறார். அப்படி அவர் அளித்த பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சவுரவ் கங்குலி கூறியதாவது : நான் அவரது ஓய்வு முடிவு குறித்து நேரடியாக அவரிடமே பேசுவேன். ஆனால் மீடியாவாகிய உங்களிடம் இதுகுறித்து நான் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என்று நகைச்சுவையான ஒரு பதிலை அளித்து இருந்தார்.
இதையும் படிங்க : இதை மட்டும் பண்ணா போதும்.. இந்திய டி20 அணிக்கு சுப்மன் கில் மீண்டும் வருவார் – அஷ்வின் கருத்து
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி அறிமுகமான போது கங்குலி தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அவரது கேப்டன்சியின் கீழ் அறிமுகமான தோனி பின்னர் இந்திய அணிக்காக டி20, ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் கேப்டனாக பெற்று தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.



