
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடருக்கு முன்பாக விராட் கோலி சுமாரான ஃபார்மில் இருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 5 வருடத்தில் விராட் கோலி 3 சதம் மட்டுமே அடித்துள்ளது சிறந்த செயல்பாடு அல்ல என்று ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார்.
இருப்பினும் ஆஸ்திரேலியாவில் விராட் கோலி சிறப்பாக செயல்படுவார் என்றும் அவருக்கு தெரிவித்திருந்தார். அது பற்றி கேட்ட போது இந்திய அணியை பேசுவதற்கு ரிக்கி பாண்டிங் யார்? என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அதிரடியான பதிலடி கொடுத்தார். அத்துடன் ஆஸ்திரேலியாவில் விராட் கோலி, ரோஹித் சர்மா அசத்துவார்கள் என்றும் கம்பீர் ஆதரவு தெரிவித்திருந்தார்.
அதற்கு ரிக்கி பாண்டிங் பதிலடி கொடுத்தார். மேலும் மேத்தியூ ஹைடன், கில்கிறிஸ்ட், ப்ராட் ஹாடின் போன்ற முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் கௌதம் கம்பீர் முட்கள் நிறைந்த கேரக்டர் என விமர்சித்தார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலியர்கள் கூறும் கருத்துக்களுக்கு அவர்களுடைய ஸ்டைலில் பதிலடி கொடுப்பதில் தவறில்லை என சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“அதை அப்படியே விடுங்கள் என்று நான் சொல்வேன். ஊடகங்களில் அவர் சொன்ன விஷயங்களுக்காக சில விமர்சனங்கள் எழுந்ததை நானும் பார்த்தேன். அதுவே கௌதம் கம்பீர் வழி. அது அப்படியே இருக்கட்டும். ஐபிஎல் வென்ற போதும் அவர் இப்படித்தான் இருந்தார். அப்போது நீங்கள் அவரை பாராட்டி பேசினீர்கள். தற்போது 3 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கைக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்ததால் அவருடைய கருத்துக்கள் யாருக்கும் பிடிக்கவில்லை”
“ஆனால் அதுவே கௌதம் கம்பீருடைய வழியாகும். ஏன் அப்படி பேசக்கூடாது. நான் கிரிக்கெட்டை பார்க்கத் துவங்கியது முதல் ஆஸ்திரேலியர்கள் உங்களிடம் இப்படிதான் கடினமாக நடந்து கொள்வார்கள். ஹைடன், பாண்டிங் அல்லது ஸ்டீவ் வாக் ஆகியோர் தங்களுடைய கிரிக்கெட்டையும் அப்படித்தான் விளையாடினார்கள். எனவே கம்பீர் அப்படி சொன்னதில் எந்த தவறும் இல்லை”
இதையும் படிங்க: இதை யூஸ் பண்ணி விராட் கோலியை டார்கெட் பண்ணா.. இந்தியாவை தோற்கடிக்கலாம்.. மெக்ராத் அட்வைஸ்
“இதுவே அவர் சண்டையிட்டு போட்டியிடும் விதமாகும். அவருக்கு வாய்ப்பு கொடுங்கள். 2 – 3 மாதங்கள் மட்டுமே செயல்பட்டதை வைத்து அவருடைய பயிற்சியை நீங்கள் மதிப்பிட வேண்டாம்” என்று கூறினார். அந்த வகையில் இந்த தொடர் துவங்குவதற்கு முன்பாகவே விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.