இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. அனுபவ வீரர்கள் இல்லாமல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியானது இந்த தொடரை எவ்வாறு சமாளிக்கப்போகிறது? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இந்திய அணியின் சிறப்பான செயல்பாடு பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
3 வகையான இந்திய அணியிலும் இவர் விளையாட வேண்டும் : சவுரவ் கங்குலி
அதேவேளையில் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே சில வீரர்களுக்கு இந்த முதன்மை டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காதது பெரும் விவாதங்களை எழுப்பியிருந்தது. அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் நம்பிக்கை வேகப்பந்து வீச்சாளராக இருந்து வந்த முகேஷ் குமாருக்கு இடம் கிடைக்காததும் அப்போது பேசு பொருளாக மாறியது.
ஏனெனில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமான முகேஷ் குமார் வெகுவிரைவிலேயே மூன்று வகையான இந்திய அணியிலும் முக்கிய இடம் பிடித்து விளையாடி வந்தார். அதுமட்டும் இன்றி வெளிநாட்டு தொடர்களின் போதும் இந்திய அணியுடன் பயணித்து வந்தார். இப்படி தொடர்ச்சியாக இந்திய அணியுடன் பயணித்து வந்த அவருக்கு இந்த இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இந்நிலையில் முகேஷ் குமாரின் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறுகையில் : முகேஷ் குமார் நிச்சயம் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடக்கூடிய ஒரு வீரர். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து கண்டிஷனில் அவரால் மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும். உள்ளூர் தொடர், ஐபிஎல் போட்டிகள் என தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
அதுமட்டும் இன்றி என்னை பொருத்தவரை அவர் மூன்று வகையான இந்திய அணியிலும் விளையாடக்கூடிய ஒரு தகுதியான வீரர். எனவே எதிர்வரும் டி20 உலக கோப்பை, ஆசிய கோப்பை என அனைத்து அணிகளிலும் அவரை நான் பார்க்க விரும்புகிறேன். தற்போதைக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தாலும் அவர் பொறுமையாக காத்திருந்தால் நிச்சயம் மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என கங்குலி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : அடிக்க தெரியாம காலை உடைச்சுகிட்டாருன்னு சொல்றவங்களுக்கு இந்த ரகசியம் தெரியாது.. சச்சின் பேட்டி
கடந்த 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 32 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி 2023-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் மூன்று வகையான போட்டிகளிலும் அறிமுகமான அவர் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டி20 போட்டிகள் என 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



