ரோஹித், விராட் இல்லனா என்ன? அதெல்லாம் பிரச்சனை கிடையாது.. இந்திய அணியின் எதிர்காலம் குறித்து – கங்குலி பேச்சு

Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோரது எதிர்காலம் குறித்தே கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் அதிகளவு பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் இவர்கள் இருவருமே ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள வேளையில் ஒருநாள் போட்டியில் மட்டுமே தொடர்ந்து விளையாட இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக 2027-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் வரை விளையாட விருப்பம் தெரிவித்துள்ள அவர்கள் இருவரும் அந்த தொடரோடு சர்வதேச போட்டிகளில் இருந்து முற்றிலுமாக ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி யாருக்காகவும் நிற்காது : சவுரவ் கங்குலி

ஆனால் அடுத்த உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதாலும், அதற்குள் இவர்கள் இருவரும் 40 வயதை நெருங்குவார்கள் என்பதினாலும் இவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது. அதோடு இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த பி.சி.சி.ஐ : இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதால் சீனியர் வீரர்களான இவர்களை கழட்டி விடவும் வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்தும் இந்திய அணியின் எதிர்காலம் குறித்தும் முன்னாள் இந்திய கேப்டனான சவுரவ் கங்குலி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்திய கிரிக்கெட் யாருக்காகவும் நிற்கப்போவதில்லை. ஏனெனில் இங்கு நிறைய திறமைசாலிகள் உள்ளனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு பெரிய ஜாம்பவான் வீரர் ஓய்வு பெறும்போது அடுத்தடுத்த வீரர்கள் அந்த இடத்தை நிரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் சுனில் கவாஸ்கர் வெளியேறிய போது சச்சின் வந்தார். அதன் பின்னர் டிராவிட், சேவாக், லட்சுமணன் ஆகியோர் வெளியேறிய போது விராட் கோலியின் தலைமையின் கீழ் புஜாரா, ரஹானே என அடுத்தகட்ட வீரர்கள் வந்தனர். தற்போது விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் வெளியேறினாலும் அவர்களை ஈடு செய்யும் வகையில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் இருக்கின்றனர்.

- Advertisement -

இப்படி ஒவ்வொரு காலகட்டத்திற்கும் அடுத்து தலைமுறையை கொண்டு செல்ல வீரர்கள் தரமாக தயாராகி வருகிறார்கள். இந்தியாவில் ஐபிஎல் தொடர், உள்ளூர் தொடர், இந்தியா ஏ, அண்டர் 19 என ஏகப்பட்ட போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த கட்டமைப்பின் மூலம் தரமான வீரர்கள் இந்திய அணிக்கு தொடர்ந்து கிடைத்து வருகிறார்கள். எனவே நமது கிரிக்கெட்டின் அடிப்படை கட்டமைப்பு பலமாகவே உள்ளது.

இதையும் படிங்க : எளிதில் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் – மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய நட்டு

எனவே எந்த வீரர் வெளியேறினாலும் இந்திய அணியின் தரத்தை குறைக்க முடியாது. அதோடு ஒவ்வொரு ஜாம்பவான் வீரர் வெளியேறும் போது அடுத்த தலைமுறை வீரர்கள் அந்த இடத்தை கெட்டியாக பிடிக்கும் திறமையுடன் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என சவுரவ் கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement