இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த டி நடராஜன் கடந்த 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 63 போட்டிகளில் விளையாடி 67 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுதவிர்த்து கடந்த 2020-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமான அவர் ஒரு டெஸ்ட், இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு டி20 போட்டிகள் என 7 சர்வதேச போட்டிகளில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
வளர்ந்து வரும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய : டி நடராஜன்
கடந்த 2020-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் அதன்பின் ஏற்பட்ட காயம் காரணமாக இதுவரை இந்திய அணிக்கு திரும்ப முடியாமல் இருந்து வருகிறார். ஆனாலும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் உள்ளூர் போட்டிகள் என தனது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் தமிழகத்தில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது விழுப்புரத்தில் நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடராஜன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அப்படி நடராஜன் பேசிய சில விடயங்கள் தற்போது அதிகளவில் கவனிக்கப்படும் விடயமாக மாறியுள்ளது. அந்த வகையில் அவர் பேசியதாவது :
சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னால் சாதிக்க முடியும் என்றால் நிச்சயம் உங்கள் எல்லோராலும் சாதிக்க முடியும். கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. தன்னம்பிக்கை இல்லை என்றால் எதுவும் சாதிக்க முடியாது. நல்ல உடை மற்றும் உணவு இல்லாமல் தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.
எப்போதுமே என்னுடைய முயற்சியை நான் கைவிட்டது கிடையாது. எந்த உயரத்திற்கு சென்றாலும் தன்னடக்கம் வேண்டும். கடந்து வந்த பாதையை மறக்கக்கூடாது. எனவே தான் சொந்த ஊரில் மைதானம் அமைத்து இலவசமாக பயிற்சி வழங்கி வருகிறேன். என்னுடன் துணை நின்ற நண்பர்களுக்கும் உதவி வருகிறேன். யாருக்கும் எளிதில் எதுவும் கிடைத்து விடாது. எல்லா தடைகளையும் மீறி உழைக்க வேண்டும்.
இதையும் படிங்க : பும்ரா இல்லன்னா இந்தியா ஜெய்ப்பதாக பேசுறவங்களுக்கு இது தெரியாது.. விமர்சனங்களுக்கு சச்சின் பதிலடி
தற்போதுள்ள மாணவர்கள் டிவி முன்பாகவும், செல்போன் முன்பாகவும் நேரத்தை வீணடிக்கிறார்கள். ஆனால் அதனை தவிர்த்து உழைக்க வேண்டும். எல்லா துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளது. அதை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வளர்ந்து வரும் மாணவர்களுக்கு நடராஜன் அறிவுறை வழங்கியது குறிப்பிடத்தக்கது.



