ஐபிஎல் 2022 பிளே ஆஃப் சுற்று மைதானம், மகளிர் ஐபிஎல் பற்றி கங்குலி வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ

Ganguly
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 4-வது வாரத்தைக் கடந்து மிகுந்த விறுவிறுப்புடன் மும்பை நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களை மகிழ்வித்தது. அந்த வகையில் வரும் மே 22-ஆம் தேதி வரை நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட தொடரில் அபாரமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் தீவிரமாக போராடி வருகின்றன. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட குஜராத், லக்னோ போன்ற புதிய அணிகள் அடுத்தடுத்த வெற்றிகளால் புள்ளி பட்டியலில் டாப் இடங்களில் வெற்றி நடை போடுகின்றன.

IPL 2022

- Advertisement -

அதேபோல் ஹைதெராபாத், பெங்களூரு போன்ற அணிகளும் தொடர் வெற்றிகளால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் சிறப்பாக விளையாடி வருகின்றன. ஆனால் மிகப் பெரிய ட்விஸ்ட் போல நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை பங்கேற்ற முதல் 7 போட்டிகளிலும் தொடர் தோல்விகளை பதிவு செய்து வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் 7 போட்டிகளில் தோல்வி அடைந்த அணியாக மோசமான சாதனை படைத்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

விறுவிறுப்பான ஐபிஎல் 2022:
அதன் காரணமாக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் முதல் அணியாக மும்பை வெளியேறுவது உறுதியாகிவிட்டது. அதேபோல் 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயருடன் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் விளையாடி வரும் சென்னையும் 7 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றாலும் 5 தோல்விகளை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் திண்டாடுவது அந்த அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. தற்போதைய நிலைமையில் அந்த அணியும் மும்பையை தொடர்ந்து லீக் சுற்றுடன் வெளியேறும் அணிகளில் 2-வது இடத்தில் நிற்கிறது.

IPL 2022 (2)

இப்படி பல எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் இந்த வருடம் ஐபிஎல் தொடர் வரும் மே 29-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது. முன்னதாக இந்த தொடரில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டது. அதன்படி வீரர்களின் நலன் கருதி தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று முழுவதும் மும்பை, புனே ஆகிய நகரங்களில் மட்டும் 25 – 50% ரசிகர்களின் அனுமதியுடன் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

பிளே ஆஃப் சுற்று எங்கே:
ஆனால் அதன்பின் பைனல் உட்பட சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் முக்கியமான பிளே ஆஃப் சுற்றுக்கான அட்டவணை, மைதானங்கள் போன்றவை அதிகாரபூர்வமாக வெளியிடப்படாமல் இருந்த நிலையில் அதுபற்றி பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தற்போது புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரின் நாக் அவுட் போட்டிகளை கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளோம். மே 22க்கு பின்பு நடைபெறும் அந்த சுற்றில் 100% ரசிகர்களை அனுமதிக்க உள்ளோம்” என்று கூறினார்.

Women's IPL

அவரது அறிவிப்பின் படி பிளே ஆஃப் சுற்றின் குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் ஆகிய போட்டிகள் வரும் மே 24 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து குவாலிபயர் 2 மற்றும் மாபெரும் இறுதி போட்டி ஆகியன வரும் மே 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 100% ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கங்குலி அறிவித்துள்ளார்.

- Advertisement -

மகளிர் ஐபிஎல்:
அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் தோல்வியின் பிடியில் சிக்கியிருக்கும் இந்திய மகளிர் அணியை தரம் உயர்த்துவதற்காக மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என அனைவரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்தக் கோரிக்கையை ஏற்றுள்ள பிசிசிஐ அடுத்த வருடம் முழுமையான மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு முன்னோட்டமாக இந்த வருடம் வரும் மே 24 – 28 ஆகிய தேதிகளில் ஒருசில போட்டிகளை நடத்த உள்ளதாகவும் கங்குலி அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலியின் பார்ம் மோசமாக மாறியதற்கு பிசிசிஐ தான் காரணம் – முன்னாள் வீரர்கள் குற்றசாட்டு

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மகளிர் சேலஞ்சர்ஸ் தொடர் வரும் மே 24 – 28 ஆகிய தேதிகளில் லக்னோவின் ஏக்நா மைதானத்தில் நடத்த உள்ளோம். 2023 முதல் முழுமையான மகளிர் ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு நல்ல தருணமாகும். அது ஆடவர் ஐபிஎல் தொடரை போலவே மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும்” எனக்கூறி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement