கிரிக்கெட்டில் பொதுவாக ஒரு அணி வெற்றி பெறுவதற்கு முதலில் நிலையான கேப்டன் அமைந்தால் தான் அவரது தலைமையில் அனைத்து வீரர்களும் ஒன்றிணைந்து உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களை வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகும் என்பது அடிப்படையாகும். அந்த நிலைமையில் உலக கோப்பையை வெல்லா முடியாவிட்டாலும் நீண்டகாலம் கேப்டன்ஷிப் செய்த சௌரவ் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 2007, 2011 உலகக் கோப்பைகளை வென்ற எம்எஸ் தோனி தாம் உருவாக்கிய வீரர்களை வைத்து 2013இல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றார். அவருக்குப்பின் 2014 முதல் டெஸ்ட் போட்டிகளிலும் 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் நீண்ட காலம் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி தலைமையில் உலகக் கோப்பையை வெல்ல முடியாத இந்திய அணி எஞ்சிய தொடர்களில் சக்கை போடு போட்டது.

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றி பெற்ற நிலையில் ஐபிஎல் மற்றும் உலக கோப்பையை வெல்லாத விராட் கோலிக்கு பதில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று விமர்சனங்கள் வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த விராட் கோலி 2021 டி20 உலக கோப்பையில் வென்றாலும் வெல்லாவிட்டாலும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்வதாக கூறினார்.
7 மாதம் 7 கேப்டன்கள்:
அந்த நிலைமையில் அவரது தலைமையில் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் இந்தியா வெளியேறியதால் மேலும் அதிருப்தியடைந்த பிசிசிஐ வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்ற என்பதைக் சாக்காக வைத்து விராட் கோலியின் ஒருநாள் கேப்டன் பதவியை பறித்து ரோகித் ஷர்மாவிடம் ஒப்படைத்தது. அதனால் மனமுடைந்த அவர் வெளி உலகிற்கு பணிச்சுமை என்பதை காரணம் காட்டி 68 போட்டிகளில் 40 வெற்றிகளுடன் வெற்றிகரமான ஆசிய கேப்டன் என்ற சாதனை படைத்திருந்த போதிலும் டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பின் முழுநேர கேப்டன் அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தனது முதல் ஒருநாள் தொடரிலேயே காயத்தால் வெளியேறியதால் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்ட இந்தியா வைட்வாஷ் தோல்வியடைந்தது. அத்துடன் ஒன்று காயத்தால் வெளியேறுவது அல்லது ஓய்வெடுப்பது என அணியிலிருந்து நிறைய தொடர்களில் ரோகித் சர்மா விலகியிருந்தால் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, ஷிகர் தவான் என 2022 காலண்டரின் முதல் 7 மாதங்களில் இந்தியாவை 7 வெவ்வேறு வீரர்கள் கேப்டன்களாக வழி நடத்தி வருகின்றனர்.
மறுக்கும் கங்குலி:
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் இப்படி 7 வீரர்கள் கேப்டன்களாக வழி நடத்துவது இதுவே முதல் முறையாகும். அதனால் இந்த மாற்றங்களுக்கு விராட் கோலியை கேப்டன் பதவிலிருந்து பிசிசிஐ நீக்கியதே காரணமென்று நிறைய ரசிகர்கள் வெளிப்படையாகவே அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இப்போதுகூட வெஸ்ட் இண்டீஸில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த ஷிகர் தவான் ஜிம்பாப்வே தொடருக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டாலும் கடைசி நேரத்தில் அவமானப்படுத்தும் வகையில் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மொத்தத்தில் சமீப காலங்களில் நிலவும் கேப்டன்ஷிப் மாற்றம் பிசிசிஐயின் சுமாரான ஆளுமை திறன் மற்றும் தவறான முடிவுகளை வெளிப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஆனால் அதை முற்றிலும் மறுக்கும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இது போன்ற மாற்றங்கள் நிகழ்வதால் நிறைய அடுத்த தலைமுறை கேப்டன்கள் கிடைப்பதாக நேர்மறையான கோணத்தில் பதிலளித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“தற்போது ரோகித் சர்மா முழுநேர கேப்டனாக உள்ளார். அவரும் இந்திய அணியும் நிறைய போட்டிகளில் விளையாடுவதால் காயம் போன்றவற்றை சந்திக்க வேண்டியுள்ளதால் இடையிடையே ஓய்வு தேவைப்படுகிறது. ஆனால் இது நிறைய தரமான இளம் வீரர்கள் அணிக்குள் வருவதற்கான வாய்ப்பையும் சாதகத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. இதுபோக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸில் இதே இளம் வீரர்களை வைத்து நாம் தொடரை வென்றுள்ளோம். அதன் காரணமாக தற்போது எந்த நேரத்திலும் சர்வதேச அளவில் இந்தியாவுக்காக விளையாட 30 தரமான வீரர்கள் தயாராக உள்ளனர்” என்று கூறினார்.
இதையும் படிங்க: இந்தியா ஸ்ட்ராங் தான். ஆனாலும்.. ஆசியக்கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான் – முன்னாள் பாக் வீரர்
அதாவது கேப்டன்ஷிப் மாற்றத்தை மற்றும் பார்க்காமல் அதனால் ஏற்படும் நன்மைகளை பார்க்குமாறு விமர்சனங்களுக்கு சவுரவ் கங்குலி பதிலளித்துள்ளார். என்னதான் கேப்டன்ஷிப் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் எந்த தொடரிலும் தோற்காமல் இந்தியா வென்று வருவதுடன் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் கிடைப்பதையும் விமர்சிப்பவர்கள் யோசிக்க வேண்டும் என்று கங்குலி கூறியுள்ளார்.



