லெஜெண்ட்ஸ் தொடரிலிருந்து கடைசி நேரத்தில் வெளியேறிய இந்திய ஜாம்பவான் – ரசிகர்கள் ஏமாற்றம், முழுவிவரம்

Ganguly
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டுக்காக நிறைய வருடங்கள் விளையாடி சரித்திர வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து ஜாம்பவான்களாக உருவெடுத்த வீரர்கள் வயது காரணமாக ஓய்வு பெறுவதால் அவர்களது ஆட்டத்தை பார்க்க முடியாத நிலைமை ரசிகர்களுக்கு ஏற்படுகிறது. சிறுவயதில் தாங்கள் பார்த்து வளர்ந்து ஹீரோக்களாக கொண்டாடிய அந்த ஜாம்பவான் வீரர்களின் அற்புதமான ஆட்டத்தை பார்க்க முடியாமல் ஏங்கும் ரசிகர்களுக்காக சமீப காலங்களில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் தொடர்கள் உருவாக்கி நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தங்களது வாழ்க்கையை கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்த வீரர்கள் ஓய்வுக்குப்பின் பொருளாதாரத்தில் பின் தங்குவதால் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இது போன்ற கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படுகின்றன.

sehwag-sachin

- Advertisement -

அந்த வகையில் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் லீக் என்ற பெயரில் கடந்த வருடம் ஓமனில் நடைபெற்ற தொடரில் இந்திய மகாராஜாஸ், ஆசிய லயன்ஸ் மற்றும் உலக ஜெய்ன்ட்ஸ் ஆகிய 3 அணிகள் பங்கேற்றன. அந்த தொடரில் லீக் சுற்றை கடந்து இறுதிப்போட்டியில் விளையாடிய ஆசிய அணியை தோற்கடித்த உலக அணி முதல் கோப்பையை வென்று அசத்தியது. நிறைய ஜாம்பவான் முன்னாள் வீரர்கள் விளையாடியதால் ரசிகர்களிடம் மிகவும் வரவேற்பைப் பெற்ற அந்த தொடரின் 2வது சீசனை இந்த வருடம் இந்தியாவில் நடத்த அதன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

களத்தில் கங்குலி:
வரும் செப்டம்பர் 16ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கும் அந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய மகாராஜாஸ் மற்றும் உலக அணிகள் மோத உள்ளது. அந்த குறிப்பிட்ட போட்டி இந்தியாவின் 75வது சுதந்திர தினத்திற்கு அர்ப்பணிக்கும் வகையில் நிதி திரட்டும் போட்டியாக நடைபெறும் என்று அறிவித்த அதன் நிர்வாகம் அதில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திரம் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி களமிறங்குவார் என்றும் அறிவித்திருந்தது. அதை உறுதிப்படுத்திய சவுரவ் கங்குலி அதற்காக உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தயாரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

Ganguly

இந்தியாவின் மகத்தான கேப்டன் மற்றும் எதிரணியை பந்தாடிய இடது கை பேட்ஸ்மேனான சௌரவ் கங்குலி 2008இல் ஓய்வு பெற்ற சில வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி பின்னர் வர்ணனையாளராக செயல்பட்டு தற்போது பிசிசிஐ தலைவராக மாறியுள்ளதால் அவரது ஆட்டத்தை கடந்த பல வருடங்களாக பார்க்க முடியாமல் ஏங்கிய அவரது தீவிர ரசிகர்களுக்கு இந்த செய்தி மிகப்பெரிய மகிழ்ச்சியாக அமைந்தது. குறிப்பாக கொல்கத்தாவின் அரசரான தாதா கங்குலி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் விளையாடுவதை பார்ப்பதற்கு கொல்கத்தா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் தயாராக காத்திருந்தனர். அதுபோக சௌரவ் கங்குலி தலைமையில் யுவராஜ் சிங் போன்ற நட்சத்திர முன்னாள் இந்திய வீரர்கள் அடங்கிய அணியும் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

கடைசி நேரத்தில்:
இப்படி அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் சொந்த காரணங்களுக்காகவும் பிசிசிஐ சம்பந்தமான வேலைகள் இருப்பதாலும் இந்த போட்டியிலிருந்து விலகுவதாக கடைசி நேரத்தில் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். இது பற்றி அவர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது பின்வருமாறு.

Ganguly

“லெஜெண்ட்ஸ் லீக் தொடரின் துவக்கத்துக்கு எனது மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது கடந்த பல தலைமுறைகளாக ரசிகர்களை மகிழ்வித்து விளையாடிய கிரிக்கெட் வீரர்களை மீண்டும் களத்துக்கு கொண்டு வரும் அற்புதமான ஐடியாவாகும். செப்டம்பர் 16ஆம் தேதியன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஒரு போட்டியில் விளையாடுவதற்கு என்னை அழைத்ததற்காக எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்”

“இருப்பினும் கிரிக்கெட் நிர்வாக சம்பந்தப்பட்ட வேலைகளை தொடர வேண்டியுள்ளதால் இந்த போட்டியில் என்னால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இப்போட்டிக்கு ரசிகர்கள் ஆவலுடன் மைதானத்துக்கு வந்து தங்களது ஆதரவை கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த போட்டி ஓய்வுபெற்ற நட்சத்திரங்களை மீண்டும் கண்முன்னே கொண்டுவரும் சிறப்பான போட்டியாகும். இப்போட்டியை பார்ப்பதற்காக நான் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இருப்பேன்” என்று கூறியுள்ளார்.

அவரது முடிவை ஏற்றுக் கொண்டுள்ள லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் இயக்குநர் ராமன் ரஹீஜா சவுரவ் கங்குலியின் இந்த முடிவை மதிப்பதாகவும் இப்போட்டியில் அவர் பங்கேற்கவில்லை என்றாலும் மைதானத்திற்கு வந்து ஆதரவு கொடுப்பதே மிகப் பெரிய ஆதரவு என்று கூறியுள்ளார். இருப்பினும் தங்களது ஹீரோவான கங்குலியை நீண்ட நாட்கள் கழித்து களத்தில் காண்பதற்கு காத்திருந்த அவரது தீவிர ரசிகர்களுக்கு இந்த செய்தி ஏமாற்றமாக அமைந்துள்ளது.

Advertisement