இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்படுகிறார். 2001 கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியின் விளிம்புக்கே சென்று விட்டது. அப்போது ராகுல் டிராவிட்டுடன் சேர்ந்து சரித்திர பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் 281 ரன்களை விளாசி இந்தியாவுக்கு வரலாற்றில் மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
அது போக உலக கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மிகவும் தரமான வலுவான அணியாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஆஸ்திரேலியாவை கண்டாலே லக்ஷ்மன் சிறப்பாக விளையாடக் கூடியவர். சொல்லப்போனால் தம்முடைய கேரியரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தான் அவர் அதிக சதங்கள் அடித்துள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் தனது முதல் சதத்தையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான் அடித்துள்ளார்.
3 மாசம் பேசல:
அதனாலேயே அவரை அப்போதைய கேப்டன் கங்குலி வெரி வெரி ஸ்பெஷல் லக்ஷ்மன் என்று பாராட்டுவது வழக்கமாகும். ஆனால் அப்படிப்பட்ட லக்ஷ்மனை 2003 உலகக் கோப்பையில் விளையாடிய இந்திய அணியில் கங்குலி தேர்ந்தெடுக்கவில்லை. அவருக்கு பதிலாக நயன் மோங்கியா தேர்வு செய்யப்பட்டார். அதன் காரணமாக தன்னிடம் லக்ஷ்மன் 3 மாதங்கள் பேசவில்லை என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த முடிவின் மீது லக்ஷ்மன் மகிழ்ச்சியின்றி இயற்கையாக ஏமாற்றத்தைக் கொண்டிருந்தார். பல வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து அணியில் தேர்ந்தெடுக்காத போது அது போன்ற நிகழ்வுகள் பலமுறை நடந்துள்ளன. அணியில் இடம் கிடைக்காவிட்டால் யாரும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். லக்ஷ்மன் உலகக் கோப்பையில் கழற்றி விடப்பட்டார்”
மனம் திறந்த கங்குலி:
“அதன் காரணமாக 3 மாதங்கள் அவர் என்னிடம் பேசவில்லை. பின்னர் நான் அவரிடம் தாமாக சென்று பேசினேன். உலகக்கோப்பை போன்ற தொடரில் அதுவும் லக்ஷ்மன் போன்ற நட்சத்திர அந்தஸ்து கொண்டவருக்கு இடம் கிடைக்கா விட்டால் ஏமாற்றத்தைச் சந்திப்பது சகஜமாகும். இருப்பினும் அந்த உலகக் கோப்பையில் நாங்கள் ஃபைனல் வரை சென்று நன்றாக விளையாடினோம். அதனால் தொடரின் முடிவில் அவர் மகிழ்ச்சியாகவே இருந்தார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: வெறும் 15 தான்.. 2027 உலகக் கோப்பையில் விராட், ரோஹித் ஆடுவது ரொம்ப கஷ்டம்.. கங்குலி பேட்டி
முன்னதாக டெஸ்ட் போட்டிகள் அளவுக்கு லக்ஷ்மன் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் 1240 ரன்களை 27.55 என்ற மட்டுமே எடுத்த அவரை விட மோங்கியா நல்ல ரெக்கார்ட்டையும் துல்லியமாக ஃபீல்டிங் செய்யும் திறமையையும் பெற்றிருந்தார். அதன் காரணமாகவே உலகக் கோப்பையில் லக்ஷ்மனை இந்திய அணி தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



