இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்று வருகிறார்கள். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் அவர்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஜோடியாக ஓய்வு பெற்றார்கள். அதே போல சமீப காலங்களில் அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடத் தவறினார்கள்.
அதனால் நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடருக்கு முன்பாக அவர்கள் டெஸ்ட் போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே அவர்கள் இந்தியாவுக்காக விளையாட போகிறார்கள். 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் சிறப்பாக விளையாடிய அவர்கள் இந்தியா 12 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார்கள்.
2027 கஷ்டம் தான்:
அதன் காரணமாக அடுத்த 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஜோடியாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவே இந்தியாவுக்காக அவர்கள் விளையாடப் போகும் கடைசி தொடராக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதற்கு முன்பாக இந்தியா 27 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த 27 போட்டிகளிலும் அவர்கள் இந்தியாவுக்காக விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்நிலையில் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் விளையாடுவது மிகவும் கடினமாக இருக்கும் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஏனெனில் டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர்கள் இடைப்பட்ட காலங்களில் விளையாடாமல் இருப்பதால் ஃபார்மை இழக்க வாய்ப்புள்ளதாக கங்குலி கூறியுள்ளார். அல்லது இளம் வீரர்கள் அவர்களை விட சிறப்பாக விளையாடி அவர்களது இடத்தை வசமாக்கலாம் என்றும் கங்குலி கணித்துள்ளார்.
கங்குலி கருத்து:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது எளிதாக இருக்காது. உங்களுக்கு விளையாட வருடத்திற்கு 15 போட்டிகள் மட்டுமே இருக்கிறது. எனவே என்னிடம் எந்த ஆலோசனையும் இல்லை. என்னைப் போலவே அவர்களும் இந்த விளையாட்டைப் பற்றி நன்றாக அறிவார்கள். ஆனால் அனைவரைப் போல நாமும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க: சர்வதேச போட்டியா இருந்தாலும் சரி, ப்ராக்டீஸ்ஸா இருந்தாலும் சரி.. பும்ரா இப்படித்தான் – ரவி சாஸ்திரி கருத்து
“அதாவது அவர்களிடமிருந்து விளையாட்டு தொலைவில் செல்லலாம். அல்லது அவர்கள் விளையாட்டிலிருந்து தொலைவுக்கு செல்லலாம்” எனக் கூறினார். 2027இல் ரோஹித் சர்மா, 40 வயதையும் விராட் கோலி 39 வயதையும் தொட்டு விடுவார்கள். அந்த வயதில் விளையாடுவதற்கு ஃபாரம் மற்றுமின்றி அவர்கள் நல்ல ஃபிட்னஸையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



