இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டனர். இந்தியாவுக்காக ஏராளமான வெற்றிகளில் பங்காற்றிய அவர்கள் அடுத்ததாக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளனர். தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 2027 உலகக் கோப்பையே அவர்கள் இந்தியாவுக்காக விளையாடும் கடைசி தொடராக இருக்கும் என்று ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் 2027 உலகக் கோப்பைக்கு முன் அவர்களை கழற்றி விட இந்திய அணி மற்றும் தேர்வுக்குழு முடிவு எடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஏனெனில் 2027ஆம் ஆண்டு ரோஹித் 40, கோலி 39 வயதைத் தொட்டிருப்பார்கள். அந்த வயதில் அவர்களால் நல்ல உடல் தகுதியுடன் நல்ல ஃபார்மில் அசத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.
2027இல் கஷ்டம் தான்:
எனவே டெஸ்ட் கிரிக்கெட்டை போலவே ஒருநாள் போட்டிகளிலும் இப்போதிலிருந்தே இளம் அணியை உருவாக்கி 2027 உலகக் கோப்பையை வெல்ல தேர்வுக்குழுவினர் விரும்புகிறார்கள். அதனால் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் விராட், ரோஹித்தை கழற்றி விட அவர்கள் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 2027 வரை விராட், ரோஹித் விளையாடுவது கடினம் என்று சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக அசத்தும் பட்சத்தில் விளையாட முடியும் என்றாலும் அதை உறுதியாக சொல்ல முடியாது என்று அவர் கூறியுள்ளார். அதே சமயம் அடுத்து நடைபெறும் ஆசிய கோப்பையை சூர்யகுமார் தலைமையில் இந்தியா வெல்லும் என்று தெரிவிக்கும் கங்குலி இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவர்களுடைய நிலை குறித்து எனக்குத் தெரியாது. எனவே அதைப்பற்றி என்னால் கருத்து தெரிவிக்க முடியாது”
கங்குலி கருத்து:
“அவர்கள் விளையாடுவார்களா என்று சொல்வது மிகவும் கடினம். நன்றாக விளையாடக் கூடியவர்கள் இந்தியாவுக்காக விளையாடுவார்கள். ஒருவேளை விராட், ரோஹித் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் தொடர்ந்து விளையாட வேண்டும். கோலியின் ஒருநாள் ரெக்கார்ட் அற்புதமானது. ரோகித் சர்மாவும் நல்ல ரெக்கார்டை கொண்டுள்ளார்”
இதையும் படிங்க: 17 ரன்ஸ்.. 9க்கு 9 சாதனை வெற்றி.. முதல் முறையாக அவுட்டாக்கிய தெ.ஆ அணியை வீழ்த்திய ஆஸி
“அவர்கள் இருவருமே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறப்பானவர்கள். ஐபிஎல் தொடரில் விளையாடிய இந்திய வீரர்கள் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளார்கள். அடுத்ததாக அவர்கள் செப்டம்பர் 9 முதல் ஆசியக் கோப்பையில் விளையாட உள்ளனர். இந்தியா வலுவான அணி. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்களால் வலுவாக செயல்பட முடியும் பட்சத்தில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் அசத்த முடியும். எனவே எனது கருத்துப்படி இந்தியா ஆசிய கோப்பை வெல்லும். துபாயில் நல்ல பிட்ச்சில் அவர்களை வீழ்த்துவது கடினம்” என்று கூறினார்.



