ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள மராரா நகரில் இருக்கும் டார்வின் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய நேரப்படி மதியம் 2.45 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு சிக்ஸருடன் ஆட்டத்தை துவங்கிய கேப்டன் மிட்சேல் மார்ஷ 13 (7) ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஜோஸ் இங்லீஷ் டக் அவுட்டாக மறுபுறம் எதிர்பார்க்கப்பட்ட ட்ராவிஸ் ஹெட் 2 ரன்னில் அவுட்டானார். அதனால் 30/3 என ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலிய தடுமாறிய போது அடித்து நொறுக்கிய கேமரூன் கிரீன் 35 (13) ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
ஆஸ்திரேலியா அசத்தல்:
மிடில் ஆடரில் டிம் டேவிட் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் மிட்சேல் ஓவன் 2, கிளன் மேக்ஸ்வெல் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்கள். ஆனால் இந்த பக்கம் விடாது வெளுத்து வாங்கிய டேவிட் அரை சதத்தை விளாசி 4 பவுண்டரி 8 சிக்சர்களை பறக்க விட்டு 83 (52) ரன்களில் அவுட்டானார்.
இறுதியில் நாதன் எலிஸ் 12, பென் ட்வார்சுய்ஸ் 17 ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் ஆஸ்திரேலியா 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை ஆல் அவுட் செய்து தென்னாப்பிரிக்கா சாதனை படைத்தது. அந்த அணிக்கு க்வேனா மபாகா 4, ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
9வது சாதனை வெற்றி:
அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் ஐடன் மார்க்ரம் 12 ரன்னில் அவுட்டாக அடுத்து வந்த டிரே பிரிட்டோரியஸ் 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் ரியான் ரிக்கல்ட்டன் அதிரடியாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் தேவால்டு பிரேவிஸ் 2 ரன்னில் அவுட்டானார். அடுத்ததாக வந்த ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாட முயற்சித்து 37 (27) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இந்தப் பக்கம் ரிக்கல்டன் அரை சதத்தை அடித்த போதிலும் மறுபக்கம் ஜார்ஜ் லிண்டே 0, கோர்பின் போஸ்க் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர். இறுதியில் கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட போது ரிக்கல்டனும் 71 (55) ரன்களில் மேக்ஸ்வெலின் அற்புதமான கேட்ச்சில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்ய தவறினார். அதனால் தென்னாப்பிரிக்காவை 20 ஓவரில் 161/9 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.
இதையும் படிங்க: இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட காயத்தால் ஆசிய கோப்பை வாய்ப்பை இழக்கும் 3 இந்திய வீரர்கள் – விவரம் இதோ
அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹேசல்வுட், பென் ட்வார்சுய்ஸ் தலா 3 விக்கெட் எடுத்தனர். இதையும் சேர்த்து ஆஸ்திரேலியா கடைசியாக விளையாடிய 9 போட்டிகளில் 9 வெற்றிகளை பெற்றுள்ளது. இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக தங்களது அதிக வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2024 பிப்ரவரி – 2024 ஜூன் வரை 8 வெற்றிகள் பெற்றதே முந்தைய சாதனை.



