இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி ஜூன் 20ஆம் தேதி துவங்கிறது. இம்முறை சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தில் களமிறங்குவதால் வெற்றி பெறுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இம்முறை இங்கிலாந்து மண்ணில் இந்தியா வெற்றி பெற வேண்டுமெனில் 2018, 2021 ஆகிய வருடங்களில் விளையாடிய அனுபவத்தை கொண்ட ரிசப் பண்ட் சிறப்பாக விளையாட வேண்டும் என்று ஜாம்பவான் சவுரவ் கங்குலி அறிவுறுத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சும் அளவுக்கு அசத்தி வரும் அவர் இதற்கு முன் இங்கிலாந்தில் சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார்.
கங்குலி அறிவுரை:
ஆனால் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் அதிரடியாக விளையாடுகிறேன் என்ற பெயரில் சொதப்பிய அவர் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதன் காரணமாக சுனில் கவாஸ்கர் நேரலையில் “ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட்” என்று அவரை விமர்சித்ததை மறக்க முடியாது. எனவே இங்கிலாந்தில் ரிசப் பண்ட் மிகவும் நங்கூரமாகவும் சூழ்நிலையை உணர்ந்தும் விளையாடி பெரிய ரன்கள் குவிக்குமாறு கங்குலி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
பார்ப்பதற்கு அசிங்கமாக தெரியும் அந்த பழைய காலத்து அணுகுமுறையை ரிசப் பண்ட் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவர் மிகவும் நல்ல வீரர். ஆனால் அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விளையாடியதை மீண்டும் தொடர வேண்டும். ஆஸ்திரேலியாவில் அவரது ஆட்டத்தைப் பார்த்தேன். அது எனக்கு பிடிக்கவில்லை”
அசிங்கமான அணுகுமுறை:
“அதில் அதிகப்படியான ஷாட்டுகள் இருந்தது. அவர் குருட்டுத்தனமாக அனைத்து பக்கங்களிலும் பேட்டை தொடர்ந்து சுழற்றினார். பந்து கொஞ்சம் ஸ்விங் ஆகக்கூடிய சூழ்நிலைகளில் நீங்கள் அவ்வாறு பேட்டிங் செய்யக்கூடாது. அவர் போராட்டத்தைக் காண்பிக்க வேண்டும். நல்ல தடுப்பாட்டத்தைக் கொண்டிருக்கும் அவரிடம் அதையே நான் பார்க்க விரும்புகிறேன்”
இதையும் படிங்க: டி20யில் விராட் கோலி எனக்கு நம்ப முடியாத ஹெல்ப் பண்ணிருக்காரு.. இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பேத்தல்
“அவர் போராட்டத்தைக் காண்பித்து நங்கூரமாக விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். அதற்காக அசிங்கமாக விளையாடுங்கள். அதிரடியாக விளையாடுவது அவருடைய பலம் என்பது எனக்கு தெரியும். ஆனால் சூழ்நிலைக்கு தகுந்தார் போலவும் அவர் விளையாடுவது அவசியம்” எனக் கூறினார். இம்முறை ரிஷப் பண்ட் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



