தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 15 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்றது. அந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான கொல்கத்தா பிட்ச் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இத்தனைக்கும் கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக 3 – 0 (3) கணக்கில் இந்தியா சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்த பிட்ச்களே முக்கிய காரணமாக அமைந்திருந்தது. ஆனால் அந்த தோல்வியிலிருந்து பாடத்தைக் கறக்காத இந்திய அணி கொல்கத்தாவிலும் அதே போன்ற பிட்ச்சை அமைத்து மற்றுமொரு வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்துள்ளது.
தோல்வி பாடம்:
அது பற்றி கேட்டதற்கு தாங்கள் தான் இப்படிப்பட்ட பிட்ச்சை கேட்டு வாங்கியதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். மேலும் சவாலான பிட்ச்சில் சிறப்பாக விளையாடாததே இந்தியாவின் தோல்விக்கு காரணமானதாகவும் அவர் கூறியது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இனிமேலாவது கௌதம் கம்பீர் தோல்வி பாடத்தைக் கற்றுக்கொண்டு நல்ல பிட்ச்களில் விளையாட வேண்டும் என்று ஜாம்பவான் சௌரவ் கங்குலி அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக 3 நாட்களில் வெல்லலாம் என்ற அணுகுமுறையை மாற்றி தரமான இந்திய பவுலர்களை நம்பி 5வது நாளிலும் வெல்ல முடியும் என்று கௌதம் கம்பீர் நினைக்க வேண்டுமென கங்குலி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அங்கே எந்த சர்ச்சையும் இல்லை. அது டெஸ்ட் போட்டிக்கு தகுந்த சிறந்த பிட்ச்சாக இல்லை. துரதிஷ்டவசமாக இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது”
கங்குலி அட்வைஸ்:
“அவர்கள் 120 ரன்கள் அடித்திருக்க வேண்டும். ஆனால் அது டெஸ்ட் போட்டிக்குத் தேவையான மிகச்சிறந்த பிட்ச்சாக இல்லை. அது போன்ற பிட்ச் தான் வேண்டுமென்று க்யூரேட்டரிடம் கேட்டதாக கம்பீர் கூறியுள்ளார். ஆம் அது உண்மை. அதற்கான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டன. கம்பீரை எனக்குப் பிடிக்கும். இங்கிலாந்தில் அசத்திய அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் அசத்தி வருகிறார்”
இதையும் படிங்க: பிட்ச்சில் பேய் இல்ல.. இதை சோதிப்பதற்காக கேட்டு வாங்கிய பிட்ச்சில் இந்தியா தோற்க இதான் காரணம்.. கம்பீர்
“ஆனால் நாம் நல்ல பிட்ச்சுகளில் விளையாட வேண்டும். பும்ரா, சிராஜ், ஷமி ஆகியோர் மேலே அவர் நம்பிக்கை வைக்க வேண்டும். ஸ்பின்னர்கள் டெஸ்ட் போட்டிகளை இந்தியாவுக்காக வென்று கொடுப்பார்கள். டெஸ்ட் போட்டிகளை 5 நாட்களில் வெல்ல முயற்சியுங்கள். 3 நாட்களில் அல்ல” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி நவம்பர் 22ஆம் தேதி கௌகாத்தியில் துவங்குகிறது.



