இந்திய கிரிக்கெட் அணி சூதாட்ட பிரச்சினையால் முடங்கியபோது இளம் வீரர்களை வைத்து மிகப்பெரிய அணியாக மாற்றிக் காட்டியவர் முன்னாள் கேப்டன் கங்குலி. வலுவிழந்த இந்திய அணியை அப்படியே கட்டமைத்து பல இளம் வீரர்களை இந்திய அணிக்காக உருவாக்கி அவர்களை இன்று மிகப் பெரிய ஜாம்பவான்களாக மாற்றியது கங்குலி என்றால் அது மிகையல்ல. கங்குலியின் தலைமையின் கீழ் ஹர்பஜன், ஜாகீர் கான், யுவராஜ் சிங், சேவாக், தோனி, பதான் என ஏகப்பட்ட வீரர்களை அவர் இந்திய அணிக்கு கண்டெடுத்து வளர்த்து விட்டுள்ளார்.
அவர் எடுக்கும் துணிச்சலான முடிவுக்கும், அதிரடியான நடவடிக்கைகளுக்கும் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ஒரு வெற்றிகரமான பேட்ஸ்மேன் என்பது மட்டுமில்லாமல் அதனையும் தாண்டி தலைமைப் பண்புகள் மூலம் தான் யார் என உலகிற்கு நிரூபித்தவர் தான் முன்னாள் கேப்டன் கங்குலி. இன்றளவும் இந்திய அணியின் பெரிய கேப்டன் என்று கூறினாலே சட்டென்று நம் நினைவுக்கு வருவது கங்குலி தான். அதே ஆளுமையில் தற்போது அவர் பிசிசிஐயின் தலைவராக இருக்கிறார்.
குறிப்பாக அவர் பிசிசிஐ தலைவர் தேர்தலில் நிற்கும் போது அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு ஆளுமைத் தன்மையை அவர் நிலைநாட்டி உள்ளார். இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர்களான சச்சின், தோனி, கபில்தேவ் ஆகியோரின் வாழ்க்கை திரைப்படமானது போல் தற்போது தாதா கங்குலியின் வாழ்க்கை பயணமும் திரைப்படமாக மாற உள்ளது.
இதுனால் வரை கங்குலி தனது பயோபிக் திரைப்படத்திற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில் தற்போது திடீரென அதற்கு சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசிய கங்குலி கூறுகையில் : எனது வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளேன். இந்த திரைப்படமானது இந்தி மொழியில் உருவாகி உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் யார் என்பது குறித்த தகவலை தெரிவிக்க மாட்டேன் இன்னும் சில நாட்களில் அனைத்தையும் உறுதி செய்துவிட்டு சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
கங்குலி அளித்த இந்த பேட்டிக்கு பிறகு அவரின் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் யார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. அதன்படி பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று இந்த படம் 200 முதல் 250 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கங்குலி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதம் அடித்தது முதல் பிசிசிஐ தலைவர் ஆகும் வரை அனைத்தும் அழகாக காட்சி அமைக்கப்பட்டு உருவாக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.