
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது. அந்தத் தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்த தென்னாபிரிக்கா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து மோசமாக பேட்டிங் செய்து 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் அரை சதத்தை அடித்து 54 (48) ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
அடுத்ததாக 132 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு துவக்க வீரர் ஐடன் மார்க்ரம் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக அப்போட்டியில் இங்கிலாந்துக்காக 22 வயதாகும் வலது கை வேகப்பந்து வீச்சாளர் சோன்னி பேக்கர் அறிமுகமானார். தனது அறிமுகப் போட்டியிலேயே தடுமாற்றமாக பவுலிங் செய்த அவரை மார்க்ரம் அடித்து நொறுக்கினார்.
அந்த வகையில் அதிரடியாக விளையாடிய மார்க்ரம் 23 பந்துகளில் 50 ரன்கள் அடித்து இங்கிலாந்துக்கு எதிராக வேகமான அரை சதத்தை அடித்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையை படைத்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 13 பவுண்டரில் 2 சிக்சருடன் 86 (55) ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் ரிக்கல்டன் 31* ரன்கள் எடுத்ததால் 20.5 ஓவரிலேயே இலக்கைத் தொட்ட தென்னாபிரிக்கா எளிதாக வென்றது.
மறுபுறம் அடில் ரசித் 3 விக்கெட்டுகள் எடுத்தும் இங்கிலாந்து தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அறிமுக வீரர் சோன்னி பேக்கர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. சொல்லப்போனால் அறிமுகப் போட்டியிலேயே சுமாராக பவுலிங் செய்த அந்த பச்சைப்புள்ளை போன்ற பவுலரை தென்னாப்பிரிக்கா அடித்து நொறுக்கியது.
இதையும் படிங்க: டிம் சவூதியை முந்தி சாதனை நிகழ்த்திய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் – விவரம் இதோ
அதனால் 7 ஓவரில் 76 ரன்களை 10.90 என்ற எக்கனாமியில் வாரி வழங்கிய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியிலேயே அதிக ரன்களை வழங்கிய இங்கிலாந்து வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமான இங்கிலாந்து வீரர் லியாம் டாசன் 70 ரன்கள் கொடுத்ததே முந்தைய சாதனை. அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியில் குறைந்தது 7 ஓவர்கள் வீசிய பவுலர்களில் அதிக எக்கனாமி (10.85) கொண்ட வீரர் என்ற மோசமான உலக சாதனையையும் சோன்னி பேக்கர் படைத்துள்ளார்.