என்ன ஒரு மனசு ! வெற்றிக்கு பின் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் – குவியும் பாராட்டு

Kaur
- Advertisement -

நியூஸிலாந்து நாட்டில் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தனது 3-வது லீக் போட்டியில் அபாரமாக விளையாடிய மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

ஹமில்டன் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 317/8 ரன்கள் எடுத்தது. இதன் வாயிலாக ஒட்டுமொத்த மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக 300 ரன்களை கடந்த இந்தியா தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது.

- Advertisement -

சதம் அடித்த ஹர்மன்ப்ரீட் கௌர் – ஸ்மிரி மந்தனா:
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 78/3 என சுமாரான தொடக்கத்தை பெற்று தவித்தபோது ஜோடி சேர்ந்த நட்சத்திர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை சரமாரியாக அடித்தனர். ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல அதிரடியாக ரன்களை குவித்து 4வது விக்கெட்டுக்கு 184 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதன் வாயிலாக மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக பார்ட்னர்ஷிப் ரன்களை குவித்த இந்திய ஜோடி என்ற புதிய சரித்திர சாதனையை இவர்கள் படைத்தனர். இதில் 119 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட சதமடித்த ஸ்மிருதி மந்தனா 123 ரன்களும் 109 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட சதமடித்த ஹர்மன்பிரீட் கவூர் 109 ரன்களும் விளாசினர்.

- Advertisement -

இந்தியா முதலிடம்:
இதை தொடர்ந்து 318 என்ற பெரிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க வீராங்கனைகள் டோட்டின் மற்றும் மேத்யூஸ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அப்போது சுதாரித்த இந்திய வீராங்கனைகள் மிகச் சிறப்பாக பந்துவீசி டோட்டின் 62 ரன்கள், மேத்தியூஸ் 43 ரன்கள் என அடுத்தடுத்து அவுட் செய்தனர்.

அடுத்ததாக வந்த வீராங்கனைகளும் இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் 100/0 என நல்ல நிலையில் இருந்த அந்த அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாக தோல்வி அடைந்தது. இந்த மிகப்பெரிய வெற்றியின் வாயிலாக இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா இந்த உலகக் கோப்பைக்கான புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

- Advertisement -

நெகிழ்ச்சியான சம்பவம்:
வெஸ்ட்இண்டிஸ் அணிக்கு எதிரான இப்போட்டியில் சதமடித்து 123 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் மிக மிக முக்கிய பங்காற்றிய ஸ்மிரிதி மந்தனாவுக்கு ஆட்டநாயகி விருது அறிவிக்கப்பட்டது. அதை வாங்கச் சென்ற அவர் அந்த விருதை வாங்கிய பின் மற்றொரு நட்சத்திர வீராங்கனை மற்றும் துணை கேப்டன் ஹர்மன்பிரீட் கௌரை விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அழைத்தார்.

எதற்காக தன்னை அழைக்கிறார் என தெரியாமல் ஹர்மன்பிரீத் கௌர் அங்கு செல்ல அவரிடம் தனது ஆட்டநாயகி விருதை வழங்கிய ஸ்மிருதி மந்தனா அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஆம் இந்த போட்டியில் தன்னைப் போலவே சதமடித்து இந்தியாவின் வெற்றியில் சம அளவு பங்காற்றிய அவரும் அந்த விருதுக்கு தகுதியானவர் என நினைத்த ஸ்மிருதி மந்தனா அதை மனதில் மட்டும் வைத்துக்கொள்ளாமல் அவரையே நேரடியாக அழைத்து அந்த விருதை அவரின் கையில் கொடுத்தது ரசிகர்களை நெகிழ வைத்தது.

- Advertisement -

இது பற்றி விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்மிருதி மந்தனா பேசியது பின்வருமாறு. “இப்போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு நாங்கள் இருவருமே சமமாக பங்காற்றி உள்ளோம் என நான் கருதுகிறேன். எனவே இந்த விருதை நாங்கள் இருவருமே வாங்குவது தான் சரியானதாக இருக்கும். மேலும் ஒரு போட்டியில் 2 விருதுகளை வழங்குவதற்கு ஐசிசி ஏற்பாடு செய்யும் என நம்புகிறேன்” என சிரித்துக்கொண்டே புன்னகையுடன் கூறினார். அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஹர்மன்பிரீத் கவுர் ஏற்றுக்கொண்டார்.

ஸ்மிரிதி மந்தனாவின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஏனெனில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடந்த மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் சதமடித்து 175* ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : மும்பை அணி தவறவிட்ட ஜாம்பவானை வளைத்து போட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் – சூப்பர் சாய்ஸ்

அதன்பின் கடந்த 4 வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் படுமோசமான பார்மில் திண்டாடி வந்த அவர் ஒரு வழியாக தற்போது சதம் அடித்து பார்முக்கு திரும்பியுள்ளார். அப்படிப்பட்ட மோசமான நிலையில் தவித்து வரும் அவருக்கு இப்படி விருதை பகிர்ந்து கொடுத்தால் கண்டிப்பாக மனதளவில் ஒரு புதிய தன்னம்பிக்கையும் தைரியமும் உத்வேகமும் கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement