சர்வதேச கிரிக்கெட்டில் 2024 காலண்டர் வருடத்தில் அசத்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஐசிசி விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. அதில் 2024ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை என்ற உச்சபட்ச விருதை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. கடந்த வருடம் அவர் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அற்புதமாக விளையாடினார் என்றே சொல்லலாம்.
குறிப்பாக கடந்த வருடம் 13 போட்டிகளில் 4 சதங்கள் அடித்த அவர் 747 ரன்கள் குவித்து அசத்தினார். அதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் 4 சதங்கள் அடித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையையும் அவர் படைத்திருந்தார். மேலும் கடந்த வருடம் மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையும் அவர் படைத்தார்.
ஐசிசி விருது:
அத்துடன் கடந்த வருடம் 95 பவுண்டரிகள் அடித்த அவர் 6 சிக்ஸர்கள் அடித்தார். அதன் வாயிலாக ஒரு காலண்டர் வருடத்தில் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகள் (101) அடித்த வீராங்கனை என்ற உலக சாதனையும் மந்தனா படைத்தார். அதன் காரணமாக 2024 மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கு அவர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.
அந்த விருதில் இலங்கையின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு, தென்னாப்பிரிக்காவின் கேப்டன் லாரா, ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் அனபெல் சதர்லேண்ட் ஆகியோரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்கள். இருப்பினும் அவர்களை விட உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் மந்தனா இந்த விருதை வென்றார் என்றே சொல்லலாம். இது போக ஏற்கனவே அவர் 2018 மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீராங்கனை விருதை வென்றிருந்தார்.
சாதனை மந்தனா:
அதன் வாயிலாக ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீராங்கனை விருதை 2 முறை வென்ற முதல் ஆசிய மற்றும் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் மந்தனா படைத்துள்ளார். இதற்கு முன் நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் மட்டுமே அந்த விருதை 2 முறை வென்று இருந்தார். இந்தியா மற்றும் ஆசிய கண்டத்ததை சேர்ந்த வேறு எந்த வீராதனைகளும் வென்றதில்லை.
இதையும் படிங்க: காயத்தை கடந்து சாதிக்கும் பாண்டியாவை நம்பி தான் சூரியகுமார் இந்த முடிவை எடுத்துருக்காரு.. ஜஹீர் கான் பாராட்டு
மொத்தத்தில் இந்திய மகளிர் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மந்தனா நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வருகிறார். அவருடைய திறமை மற்றும் உழைப்பிற்கு பரிசாக இந்த ஐசிசி விருது கிடைத்துள்ளது என்றே சொல்லலாம். அவருக்கு இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.



