
ஐசிசி 2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் அக்டோபர் 23ஆம் தேதி நவிமும்பையில் நடைபெற்ற 24வது போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. அப்போட்டியில் நிச்சயம் வென்றால் மட்டுமே செமி ஃபைனலுக்கு செல்ல முடியும் என்ற வாழ்வா – சாவா சூழ்நிலையில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது.
அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து இந்தியா விளையாடிய நிலையில் கடைசி நேரத்தில் மழை வந்ததால் போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் ஆகியோர் ஆரம்பம் முதலே நியூசிலாந்தை அபாரமாக எதிர்கொண்டனர்.
குறிப்பாக நிச்சயம் வென்றாக வேண்டிய என்ற சூழ்நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் மந்தனா பொறுப்புடன் விளையாடி சதத்தை அடித்து அசத்தினார். 33.2 ஓவர்கள் வரை நங்கூரமாக விளையாடிய அவர் 212 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு அபாரமான துவக்கத்தைக் கொடுத்தார். அப்போது 10 பவுண்டரி 4 சிக்சருடன் மந்தனா 109 ரன்கள் விளாசி விக்கெட்டை இழந்தார்.
அவருடன் இணைந்து விளையாடிய பிரதிகா தம்முடைய பங்கிற்கு சதத்தை அடித்து 13 பவுண்டரி 2 சிக்ஸருடன் 122 (134) ரன்கள் விளாசி அவுட்டானார். மிடில் ஆர்டரில் கேப்டன் ஹர்மன்பிரீத் 10 ரன்னில் அவுட்டானார். இருப்பினும் ஜெமிமா ரோட்ரிகஸ் அதிரடியாக விளையாடி 11 பவுண்டரியுடன் 76* (55) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் ரிச்சா கோஸ் 4* (1) ரன்கள் எடுத்ததால் இந்தியா 49 ஓவரில் 340/3 ரன்கள் குவித்தது.
இப்போட்டியையும் சேர்த்து மந்தனா டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான மகளிர் கிரிக்கெட்டில் 17 சதங்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீராங்கனை என்ற உலக சாதனையை மந்தனா சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. மெக் லென்னிங் (ஆஸ்திரேலியா): 17
1. ஸ்மிரிதி மந்தனா (இந்தியா): 17
2. சுசி பேட்ஸ் (நியூஸிலாந்து): 14
2. டம்மி பியூமோண்ட் (இங்கிலாந்து) : 14
அத்துடன் 2025ஆம் ஆண்டு மட்டும் மந்தனா இதுவரை 5 சதங்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக மகளிர் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சதங்கள் அடித்த வீராங்கனை என்ற உலக சாதனையையும் மந்தனா சமன் செய்துள்ளார். இதற்கு முன் இதே வருடம் தென்னாபிரிக்காவை சேர்ந்த தஸ்மின் பிரிட்ஸும் 5 சதங்கள் அடித்துள்ளார்.
இதையும் படிங்க: இதை மட்டும் பண்ணா போதும்.. சி.எஸ்.கே அணிக்கு வந்தா வாஷிங்டன் சுந்தர் அசத்துவாரு – ராபின் உத்தப்பா கருத்து
இது போக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 2வது அதிக சதங்கள் அடித்த வீராங்கனை என்ற சாதனையையும் மந்தனா படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. மெக் லென்னிங்: 15
2. ஸ்மிரிதி மந்தனா: 14*
3. சுசி பேட்ஸ்: 13
4. டம்மி பியூமோண்ட்: 12
5. நட் ஸ்கீவர்: 10