15.2 ஓவரில் 162 ரன்ஸ் பார்ட்னர்ஷிப்.. இந்தியாவுக்காக மந்தனா – ஷபாலி ஜோடி.. மகளிர் டி20யில் புதிய சாதனை

Mandhana Shafali
- Advertisement -

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளிலும் இலங்கையை தோற்கடித்த இந்தியா 4 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றுள்ளது. குறிப்பாக நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 4வது போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி 20 ஓவரில் 221/2 ரன்கள் குவித்து மகளிர் டி20 கிரிக்கெட்டில் தங்களது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது. இந்திய அணிக்கு ஷபாலி வர்மா – ஸ்மிருத்தி மந்தனா ஜோடி ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடியது.

- Advertisement -

மந்தனா – ஷபாலி ஜோடி:

ஒவ்வொரு ஓவருக்கும் 10 ரன்களுக்கு மேல் வெளுத்து வாங்கிய அந்த ஜோடி 15.2 ஓவரில் 162 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான துவக்கத்தைக் கொடுத்தது. அதன் வாயிலாக ஒரு சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக (162) ரன்கள் பார்ட்னர்ஷிப் அடித்த ஜோடி என்ற சாதனையை மந்தனா – ஷபாலி படைத்துள்ளார்கள்.

இதற்கு முன் 2019ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் இதே மந்தனா – ஷபாலி ஜோடி 143 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. தங்களுடைய அந்த பழைய சாதனையை இப்போட்டியில் உடைத்து புதிய சாதனை படைத்த அந்த ஜோடியில் மந்தனா 11 பவுண்டரி 3 சிக்ஸருடன் 80 (48) ரன்கள் குவித்தார். அதே போல ஷபாலி வெர்மா 12 பவுண்டரி 1 சிக்ஸருடன் 79 (46) ரன்கள் விளாசினார்.

- Advertisement -

இந்தியா அசத்தல்:

மிடில் ஆர்டரில் அவர்களைக் காட்டிலும் அதிரடியாக விளையாடிய ரிச்சா கோர்ஸ் 40* (16), கேப்டன் ஹர்மன்பிரித் 16* (10) ரன்கள் அடித்தார்கள். அடுத்ததாக விளையாடிய இலங்கை அணி முடிந்தளவு போராடியும் 20 ஓவரில் 191/6 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அதிகபட்சமாக கேப்டன் அத்தப்பட்டு 52, ஹாசினி பெரேரா 33 ரன்கள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

இதையும் படிங்க: கம்பீர் முதலில் ரஞ்சிக் கோப்பையில் இதை செஞ்சு காட்டனும்.. இந்தியா பலவீனமாக இதான் காரணம்.. மான்டி பனேசர்

மறுபுறம் 4வது வெற்றி பெற்ற இந்திய மகளிரணிக்கு அதிகபட்சமாக அருந்ததி ரெட்டி மற்றும் வைஷ்ணவி சர்மா தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். இதைத் தொடர்ந்து அத்தொடரின் கடைசிப் போட்டி டிசம்பர் 30ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் வென்று ஆறுதல் வெற்றி பெற இலங்கை அணி தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement