இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் 2024 முதல் செயல்பட்டு வருகிறார். அவரது வழிகாட்டுதலில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து நம்பர் ஒன் அணியாக ஜொலித்து வருகிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
குறிப்பாக கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா வரலாறு காணாத ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 3 – 1 (5) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த இந்தியா 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கோட்டை விட்டது. அந்த அடுத்தடுத்த தோல்விகளால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது.
முதலில் ரஞ்சியில் காட்டுங்க:
அதற்கான பழியை விராட் கோலி, ரோஹித் சர்மா மேலே போட முயற்சித்த தேர்வுக்குழுவும் கௌதம் கம்பீரும் அடுத்து நடைபெறவிருந்த இங்கிலாந்து தொடரில் அவர்களை கழற்றி விட முடிவெடுத்தார்கள். அதற்கு முன் அவர்களாகவே ஓய்வு பெற்ற நிலையில் சுப்மன் கில் தலைமையில் இங்கிலாந்தில் 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து இந்திய அணி அசத்தியது. அடுத்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இந்தியா எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றது.
ஆனால் அதற்கு அடுத்ததாக நடைபெற்ற தென்னாப்பிரிக்கா தொடரில் 25 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் கௌதம் கம்பீர் முதலில் ஒரு ரஞ்சிக்கோப்பை அணியின் பயிற்சியாளராக வெற்றிகரமாக செயல்பட்டுக் காட்ட வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார். மேலும் விராட், ரோஹித் அஸ்வின் ஓய்வால் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் பலவீனமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பனேசர் கருத்து:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கௌதம் கம்பீர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நல்ல பயிற்சியாளர். ஏனெனில் அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் வெற்றிகரமாக விளையாடினார். அவர் ரஞ்சிக் கோப்பையில் பயிற்சியாளராக ஆகலாம். எப்படி ஒரு டெஸ்ட் அணியை உங்களால் கட்டமைக்க முடியும் என்பது பற்றி அவர் ரஞ்சிக் கோப்பை பயிற்சியாளர்களிடம் பேச வேண்டும்”
இதையும் படிங்க: 20 ஓவரில் 221 ரன்ஸ்.. மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி.. தனித்துவமான உலக சாதனை
“தற்போது இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் பலவீனமாக இருக்கிறது. அதுவே நிதர்சனமாகும். இந்திய அணி அவ்வளவு பலமாக இல்லை. மீண்டும் பலமாக மாற கொஞ்சம் நேரமெடுக்கும். உங்களுக்கு 3 பெரிய வீரர்கள் ஓய்வு பெறும் போது மற்ற வீரர்களை தயாராகுவது மிகவும் கடினமாக இருக்கும்” என்று கூறினார்.



