ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியது. அந்த நிலையில் மூன்றாவது போட்டி டிசம்பர் 11ஆம் தேதி பெர்த் நகரில் இருக்கும் புகழ்பெற்ற வாகா மைதானத்தில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய 50 ஓவரில் மீண்டும் சிறப்பாக விளையாடி 298-6 ரன்கள் எடுத்து அசத்தியது. அதிகபட்சமாக 78-4 என தடுமாறிய போது அபாரமாக விளையாடிய அனபெல் சதர்லாந்து சதத்தை அடித்து 110 (95), அஸ்லே கார்ட்னர் 50, கேப்டன் தஹிலா மெக்ராத் 56* ரன்கள் குவித்து அசத்தினார்கள்.
ஆஸ்திரேலியா வெற்றி:
இந்திய அணிக்கு அதிகபட்சமாக அருந்ததி ரெட்டி 10 ஓவரில் 2 மெய்டன் உட்பட 26 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். பின்னர் 299 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் ஸ்ம்ரிதி மந்தனா நிதானம் கலந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் எதிர்புறம் ரிச்சா கோஸ் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
அதற்கடுத்ததாக வந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹர்லின் தியோல் 39 ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த ஹர்மன்பிரித் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஸ்மிருத்தி மந்தனா சதத்தை அடித்து 14 பவுண்டரி 1 சிக்சருடன் 105 (109) ரன்கள் குவித்து போராடி ஆட்டமிழந்தார்.
மந்தனா சாதனை:
ஆனால் அவரைத் தொடர்ந்து ஜெமிமா 16, தீப்தி சர்மா 0, மின்னு மணி 8 என மற்ற வீராங்கனைகள் வந்த வாக்கிலேயே சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினார்கள். அதனால் 45.1 ஓவரில் இந்தியாவை 215க்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன் காரணமாக 3 – 0 (3) என்ற கணக்கில் இத்தொடரை ஒய்ட்வாஷ் செய்து ஆஸ்திரேலியா வென்றது.
இதையும் படிங்க: 84 ரன்ஸ்.. துபே ஃபினிஷிங்.. ரஹானே அபாரம்.. ஐபிஎல் கேப்டன்ஷிப் பார்சல்? ஆஸியில் மிஸ் செய்யும் ரசிகர்கள்
அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆஸ்லே கார்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக இந்தப் போட்டியில் அடித்த சதத்தையும் சேர்த்து இந்த வருடம் மந்தனா 4 சதங்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் 4 சதங்கள் அடித்த முதல் வீராங்கனை என்ற மாபெரும் உலக சாதனையை மந்தனா நிகழ்த்தியுள்ளார். அத்துடன் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த ஆசிய வீராங்கனை என்ற இலங்கையின் சமாரி அட்டப்பட்டு (இருவரும் தலா 9) சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.



