- Advertisement -
இந்திய கிரிக்கெட்

14 ஃபோர்ஸ் 4 சிக்ஸ் 77 பந்தில் 100.. ஆஸியை நொறுக்கிய மந்தனா.. உலக சாதனையுடன் 2 அபார சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த ஊரில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் 2வது போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி புதிய சண்டிகரில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 49.5 ஓவரில் முடிந்தளவு போராடி 292 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

அதனால் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தங்களது அதிகபட்ச ஸ்கோரை (292) பதிவு செய்து சாதனைப் படைத்தது. அதிகபட்சமாக துவக்க வீராங்கனை மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடினார். 25 ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய பவுலர்களை அட்டகாசமாக எதிர்கொண்ட அவர் 77 பந்துகளில் சதத்தை அடித்தார்.

- Advertisement -

77 பந்தில் 100:

தொடர்ந்து அசத்திய அவர் 14 பவுண்டரி 4 சிக்ஸருடன் 128.57 ஸ்ட்ரைக் ரேட்டில் 117 (91) ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் தீப்தி சர்மா 40, ரிச்சா கோஸ் 29, ஸ்னே ராணா 24, பிரதிகா ராவல் 25 ரன்கள் எடுத்து அசத்தினர். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக டார்சி பிரவுன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

முன்னதாக இந்தப் போட்டியையும் சேர்த்து மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (12) அடித்த துவக்க வீராங்கனை என்ற உலக சாதனையை மந்தனா சமன் செய்துள்ளார். இதற்கு முன் நியூசிலாந்தின் சூசி பேட்ஸ் மற்றும் இங்கிலாந்தின் டம்மி பியூமோண்ட் ஆகியோரும் ஓப்பனிங்கில் தலா 12 சதங்கள் அடித்துள்ளனர். அத்துடன் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து விதமான சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் மந்தனா தன்னுடைய 15வது சதத்தையும் பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

2 அபார சாதனை:

அதன் வாயிலாக மகளிர் கிரிக்கெட்டில் 2வது அதிக சதங்கள் அடித்த வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் மந்தனா படைத்துள்ளார். இதற்கு முன் நியூசிலாந்தின் சூசி பேட்ஸ் மற்றும் இங்கிலாந்தின் டம்மி பியூமோண்ட் தலா 14 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனை. அந்தப் பட்டியலில் 17 சதங்கள் அடித்துள்ள ஆஸ்திரேலியாவின் மெக் லென்னிங் முதலிடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க: 292 ரன்ஸ்.. மந்தனா அபார சதத்தில்.. ஆஸிக்கு எதிராக 2வது உலக சாதனை ஸ்கோர் அடித்த இந்திய அணி

அத்துடன் இப்போட்டியில் 77 பந்துகளில் சதத்தை அடித்த மந்தனா ஒருநாள் கிரிக்கெட்டில் 2வது வேகமான சதத்தை அடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன் 2025 ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக கேப்டன் ஹர்மன்ப்ரீத் 82 பந்துகளில் சதமடித்ததே முந்தைய சாதனை. இதே பட்டியலில் 2025இல் அயர்லாந்துக்கு எதிராக 70 பந்துகளில் சதமடித்த மந்தனா முதலிடத்தில் இருக்கிறார்.

- Advertisement -