பல்வேறு போராட்டங்களை தாண்டியும் இன்று சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திட்டமிட்டபடி தற்போது நடைபெற்று வருகின்றது.முன்னதாக இன்று மாலை இந்நிலையில் இன்று கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கான போட்டிகள் நடைபெறவிருந்த வேளையில் இன்று மாலை போராட்டக்குழுவினர் சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்லும் வழிகளான அண்ணாசாலை மற்றும் வாலாஜா சாலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இரண்டு மணி நேரத்தில் போராட்டக்காரர்கள் மளமளவென்று குவியத்தொடங்கியதால் மைதாத்திற்கு செல்லும் முக்கிய வழித்தடங்கள் அனைத்தும் முடங்கின.இந்தப்போராட்டத்தில் இயக்குஞர்கள் வெற்றிமாறன்,அமீர்,பாரதிராஜா,சீமான் மற்றும் களஞ்சியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மற்றொருபுறமோ தமிழ் உணர்வுள்ள இளைஞர்கள் பலர் திரளாக திரண்டுவந்து போராட்டகளத்தில் குதித்தனர்.தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் மைதானத்திற்கு அருகில் கருப்பு பலூன் பறக்கவிடும் போராட்டமும் நடைபெற்றது.
போராட்டாக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.இதில் இயக்குஞர்கள் வெற்றிமாறன்,களஞ்சியம் உட்பட பலர் மீதும் தடியடி நடத்தப்பட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் சென்னை அணி வீரர்கள் மற்றும் கொல்கத்தா அணி வீரர்கள் மைதானத்திற்கு வர காலதாமதமானது.
கருப்பு சட்டை போட்டவர்களை மைதானத்திற்குள் அனுமதிக்க மறுத்த காவலர்கள். கருப்பு சட்டையை மாற்றிய பின்னரே போட்டியை காண ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.இன்று மாலை போட்டி நடைபெறும் பகுதியே போஸிசார் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே போர்க்களமானது.அதையும் தாண்டி போட்டி திட்டமிட்டபடி சரியாக 8மணிக்கு தொடங்கியது.
போட்டி தொடங்கிய சிறிதுநேரத்திலேயே மைதானத்திலிருந்து ரசிகர்கள் போர்வையில் அமர்ந்திருந்த போராட்டக்காரர்கள் திடீரென்று தங்களது காலணிகளை கழட்டி மைதானத்தில் வீசி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இதனால் மைதானத்தில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் காலணி வீசியவர்களை உடனடியாக காவல்துறையினர் அப்புறப்படத்தினர். மைதானத்தில் வீசிய காலணியை சென்னை அணி வீரர் ஜடேஜா அப்புறப்படுத்தினார்.தற்போது மீண்டும் போட்டி நடைபெற்று வருகின்றது.