இலங்கை மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அதில் முதல் போட்டியில் வென்ற இலங்கை ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கும் நிலையில் இரண்டாவது போட்டி செப்டம்பர் 26ஆம் தேதி துவங்கியது. கால்லே நகரில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை முதல் இன்னிங்ஸில் 602-5 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அதன் வாயிலாக நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக 500 ரன்கள் அடித்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து இலங்கை சாதனையும் படைத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தினேஷ் சண்டிமல் 116, கமிண்டு மெண்டிஸ் 182*, குசால் மெண்டிஸ் 106* ரன்கள் குவித்தனர். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மழை காப்பாற்றுமா:
அதன் பின் களமிறங்கிய நியூசிலாந்து சுழலுக்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 88 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் இலங்கைக்கு எதிராக முதல் முறையாக 100 ரன்களுக்குள் அவுட்டான நியூசிலாந்து தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது.
அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னர் 29 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கைக்கு அதிகபட்சமாக பிரபத் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின் 512 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை அணி ஃபாலோ ஆன் கொடுத்ததை தொடர்ந்து மீண்டும் நியூசிலாந்து களமிறங்கியது. ஆனால் அப்போதும் டாம் லாதம் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
முந்திய வில்லியம்சன்:
அதே போல இரண்டாவது விக்கெட்டுக்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவோன் கான்வே போராடி 61, கேன் வில்லியம்சன் 46 ரன்களில் அவுட்டானார்கள். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா 12, டேரில் மிட்சேல் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் நிறைவுக்கு வந்த 3வது நாள் முடிவில் 199-5 ரன்கள் எடுத்துள்ள நியூஸிலாந்து இன்னும் 315 ரன்கள் பின்தங்கியுள்ளது.
5 விக்கெட்டுகளை மட்டுமே கைவசம் வைத்திருப்பதால் தோல்வியின் பிடியில் சிக்கியுள்ள அந்த அணிக்கு களத்தில் டாம் ப்ளாண்டல் 47*, கிளன் பிலிப்ஸ் 32* ரன்களுடன் உள்ளனர். தற்போதைய நிலையில் கடைசி 2 நாட்கள் கால்லே நகரில் 60 – 70% மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே மழை தான் இப்போட்டியில் நியூசிலாந்தை தோல்வியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: இந்திய அணியில் என்னுடைய முதல் பணி இதுதான்.. அதுமட்டும் நடந்தா சக்ஸஸ் தான் – மோர்னே மோர்கல்
முன்னதாக இப்போட்டியில் 3வது நாளில் நியூஸிலாந்து ஆட்டத்தை துவங்கிய போது களத்தில் இருந்த கேன் வில்லியம்சன் காலை 10.25 மணிக்கு அவுட்டானார். பின்னர் இலங்கை ஃபாலோ ஆன் கொடுத்ததால் பேட்டிங் செய்த அவர் மதியம் 2.15 மணிக்கு 46 ரன்கள் குவித்து அவுட்டானார். இந்த 46 ரன்களையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது விளையாடும் வீரர்களில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலியை அவர் முந்தினார். அந்த பட்டியல்:
1. ஜோ ரூட்: 12042
2. ஸ்டீவ் ஸ்மித்: 9685
3. கேன் வில்லியம்சன்: 8881
4. விராட் கோலி: 8871
5. ஏஞ்சேலோ மேத்தியூஸ்: 7940



