SL vs PAK : இந்தியாவுக்கு உதவிய இலங்கையின் வெற்றி – பாகிஸ்தானை கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்

Pak vs SL Angelow Mattews Babar Azam
- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அங்கு அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்ற அந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 340+ ரன்கள் இலக்கை சவாலான கால்லே மைதானத்தில் பாபர் அசாம், ரகமத்துல்லா சபிக் ஆகியோரின் சிறப்பான சதங்களால் எளிதாக எட்டிப்பிடித்த பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலே தொடரில் முன்னிலை பெற்ற அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்தையும் பிடித்தது.

அதனால் தங்களது அணி இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றுவிடும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் வாய்ச் சவடால் விட்ட நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டி கடந்த ஜூலை 24இல் தொடங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் பெர்னாண்டோ 50 ரன்களும் கேப்டன் கருணரத்னே 40 ரன்களும் எடுக்க தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவ வீரர் மேத்யூஸ் 42 ரன்களும் தினேஷ் சந்திமல் 80 ரன்களும் குவித்தனர். பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக நசீம் ஷா மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

- Advertisement -

திணறிய பாகிஸ்தான்:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் இலங்கையின் தரமான சுழற்பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 231 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் இமாம்-உல்-ஹக் 32, முஹம்மது ரிஸ்வான் 24, கேப்டன் பாபர் அசாம் 16 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக ஆகா சல்மான் 62 ரன்கள் எடுத்தார். இலங்கை சார்பில் சுழலில் அசத்திய ரமேஷ் மென்டிஸ் 5 விக்கெட்டுகளும் பிரபத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும் எடுத்தனர்.

அதனால் 147 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கைக்கு டிக்வெல்லா 15, பெர்னாண்டோ 19, குசல் மெண்டிஸ் 15, மேத்தியூஸ் 35 என முக்கிய பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய கேப்டன் கருணாரத்னே 61 ரன்களும் தனஞ்சயா டீ சில்வா சதமடித்து 109 ரன்களும் குவித்தனர். அதனால் 360/8 ரன்களில் டிக்ளேர் செய்து அந்த அணி பாகிஸ்தான் வெற்றி பெற 507 என்ற மெகா இலக்கை நிர்ணயித்தது.

- Advertisement -

இந்தியாவுக்கு உதவி:
அதை துரத்திய பாகிஸ்தானுக்கு சபிக் 16 ரன்களும் இமாம்-உல்-ஹக் 49 ரன்களும் முகமது ரிஷ்வான் 37 ரன்களும் கேப்டன் பாபர் அசாம் 81 ரன்களும் எடுத்ததால் ஒரு கட்டத்தில் 176/2 என்ற நல்ல நிலையில் முதல் போட்டியை போலவே வெற்றியை நோக்கி பயணித்தது. ஆனால் அதன்பின் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய இலங்கைக்கு எதிராக பதில் சொல்ல முடியாத அந்த அணி சீட்டுக்கட்டு சரிவது போல தங்களது விக்கெட்டுகளை மளமளவென பரிசளித்து மேற்கொண்டு வெறும் 85 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை சார்பில் பந்துவீச்சில் அசத்திய ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளும் ரமேஷ் மென்டிஸ் 4 விக்கெட்டும் எடுத்தனர்.

அதனால் 246 ரன்கள் வித்யாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற இலங்கை 1 – 1 (2) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் அவ்வளவு எளிதில் சாய்ந்து விடமாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 53.33% புள்ளிகளைப் பெற்ற அந்த அணி பாகிஸ்தானை 5-வது இடத்திற்கு பின்தள்ளி 3-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.

- Advertisement -

இலங்கையின் இந்த வெற்றியால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதில் பாகிஸ்தான் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. மறுபுறம் இலங்கையின் இந்த வெற்றி தன்னுடைய எஞ்சிய போட்டிகளில் வெற்றி அடைந்தால் தாராளமாக பைனலுக்கு சென்று விடலாம் என்ற பிரகாச நிலையை இந்தியாவுக்கு ஏற்படுத்தியுள்ளது.

ஒரிஜினல் பாகிஸ்தான்:
அதைவிட இப்போட்டியில் 2-வது இன்னிங்சில் மளமளவென விக்கெட்டுகளை பரிசளித்து பாகிஸ்தான் தோற்ற விதத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு வெற்றியைப் பெற்று விட்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட ஆசைப்பட்ட அணியா இது என்று சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க : IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் ராகுலின் இடத்தை நிரப்ப காத்திருக்கும் – 3 வீரர்கள்

மேலும் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பாபர் அசாம் தலைமையில் இதுவரை வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய கத்துக்குட்டிகளுக்கு எதிராக மட்டும் டெஸ்ட் தொடரை வென்ற பாகிஸ்தான் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியையும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை மண்ணில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இது அந்த அணி கத்துக்குட்டிகளை மட்டுமே அடிக்க தகுந்த அணி என்பதை காட்டுவதாகவும் ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.

Advertisement