நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வென்ற நியூசிலாந்து ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலையில் சம்பிரதாய மூன்றாவது போட்டி ஜனவரி 2ஆம் தேதி நெல்சன் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு நிசாங்கா 14, குசால் மெண்டிஸ் 22 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய குசால் பெரேரா நியூசிலாந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு ரன்கள் குவித்தார். தொடர்ந்து பட்டாசாக விளையாடிய அவர் 13 பவுண்டரி நான்கு சிக்ஸர்கள் உட்பட சதத்தை அடித்து 101 (46) ரன்கள் குவித்து அவுட்டானார்.
பெரேரா சாதனை:
குறிப்பாக 44 பந்துகளில் 100 ரன்கள் அடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வேகமான சதத்தை பதிவு செய்த இலங்கை வீரராக சாதனை படைத்தார். அது போக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்கள் அடித்த முதல் இலங்கை வீரராகவும் பெரேரா வரலாற்றுச் சாதனை படைத்தார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அவருடன் கேப்டன் அசலங்கா 46 (24) ரன்கள் எடுத்தார்.
அதனால் இருபது ஓவரில் இலங்கை 218-5 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 219 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு துவக்க வீரர் ரச்சின் ரவிந்திரா அதிரடியாக 69 (39) ரன்கள் விளாசி நல்ல துவக்கத்தை கொடுத்தார். அவருடன் டிம் ராபின்சன் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 37 ரன்கள் எடுத்தார். ஆனால் மிடில் ஆர்டரில் டேரில் மிட்சேல் 35 (17) ரன்கள் எடுத்ததை தவிர்த்து மார்க் ஷேப்மேன் 9, கிளன் பிலிப்ஸ் 6, மைக்கேல் பிரேஸ்வல் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
இலங்கை வெற்றி:
இறுதியில் கேப்டன் மிட்சேல் சான்ட்னர் 14* (10), போல்க்ஸ் 21* (13) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் நியூஸிலாந்து 211-7 ரன்களை மட்டுமே எடுத்தது. அதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இலங்கைக்கு அதிகபட்சமாக அசலங்கா 3, ஹஸரங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதன் வாயிலாக நியூசிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக 18 வருடங்கள் கழித்து ஒரு டி20 போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பிருக்கும் 2 வீரர்கள் – விவரம் இதோ
கடைசியாக 2006ஆம் ஆண்டு வென்ற இலங்கை அதன் பின் சந்தித்த தொடர் தோல்விகளை தற்போது நிறுத்தியுள்ளது. அதனால் ஒயிட் வாஸ் தோல்வியையும் இலங்கைத் தவிர்த்துள்ளது. மறுபுறம் இப்போட்டியில் போராடி தோற்ற நியூசிலாந்து 2 – 1 (3) என்ற கணக்கில் இந்த தொடரை வென்றது.



