
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி ஆட்டமானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 186 ரன்களை குவித்ததால் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கினை இந்திய அணி 19.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 187 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் காரணமாக அமைந்தனர். விராட் கோலி 48 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 63 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் என 69 ரன்களையும் குவித்து அசத்தினர். அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
அதேவேளையில் தொடர் நாயகன் விருது அக்சர் பட்டேலுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் அக்சர் பட்டேல் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரும் பிசிசிஐ-யின் பிரத்யேக சேனலில் பேட்டி ஒன்றினை வழங்கியிருந்தனர். அதில் சூரியகுமாரிடம் அதிகாலை 3 மணிக்கு நீங்கள் ஏன் எழுந்தீர்கள் என அக்சர்பட்டேல் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சூரியகுமார் யாதவ் கூறுகையில் :
போட்டிக்கு முந்தைய நாள் இரவு எனக்கு வயிற்று வலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. அதனால் நான் அணியின் மருத்துவர் மற்றும் பிசியோவிடம் சென்று பேசினேன். டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இப்படி நடந்தால் நான் என்ன செய்வேன்? என்னால் உடம்பு சரியில்லாமல் இருக்க முடியாது. அதனால் நேரடியாக அவர்களிடம் சென்று நான் இந்த இறுதி போட்டியில் விளையாட வேண்டும்.
தயவு செய்து எனக்கு ஏதாவது மருந்து அல்லது ஊசி போடுங்கள் நாளை மாலை நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் நான் பங்கேற்க வேண்டும். அதற்கு முன் என்னை தயார் படுத்துங்கள் என்று கூறியதாக சூரியகுமார் தெரிவித்தார். மேலும் இந்திய அணி ஜெர்சியை அணிந்து மைதானத்திற்கு வந்த பிறகு வித்தியாசமான உணர்ச்சி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : IND vs AUS : டி20 ஆஸியை தோற்கடித்து தன்னை நம்பர் ஒன் அணி என நிரூபித்த இந்தியா – படைத்த 2 உலகசாதனைகள் இதோ
இப்படி கடுமையான காய்ச்சல் இருந்தும் இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்காக விளையாடியே தீர வேண்டும் என்று உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றுக் கொண்டு விளையாடிய சூரியகுமார் யாதவின் இந்த நிகழ்ச்சியான செயலை கேள்விப்பட்டதும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை கருத்துகளாக பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.