IND vs AUS : டி20 ஆஸியை தோற்கடித்து தன்னை நம்பர் ஒன் அணி என நிரூபித்த இந்தியா – படைத்த 2 உலகசாதனைகள் இதோ

India
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தில் கடந்த வருடம் துபாயில் நடந்த உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியாவுக்கு முழுநேர கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்றார். அவரது தலைமையில் அதன்பின் பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் அதிரடியான வெற்றிகளை பெற்ற இந்தியா உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியது. ஆனால் சமீபத்திய ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் தோல்வியடைந்து பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறி விமர்சனங்களை சந்தித்த இந்தியா அடுத்ததாக உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவை தனது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எதிர்கொண்டது.

Mathew Wade

- Advertisement -

உலகின் நம்பர் ஒன் அணியும் டி20 சாம்பியனும் மோதியதால் எதிர்பார்ப்பை எகிற வைத்த இந்த தொடர் மொஹாலியில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதியன்று துவங்கியது. அப்போட்டியில் பேட்டிங்கில் அதிரடியாக செயல்பட்ட இந்தியா 208 ரன்களை குவித்த போதிலும் அதை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக பந்துவீசி தோல்வியை சந்தித்து ஆரம்பத்திலேயே தொடரில் பின்தங்கி தலை குனிந்தது. அதனால் மீண்டும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட இந்திய அணி நாக்பூரில் மழையால் 8 ஓவர்களாக நடைபெற்ற 2வது போட்டியில் ரோகித் சர்மாவின் அதிரடியால் வென்று ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது.

சிறப்பான வெற்றி:
அதனால் 1 – 1 என்ற கணக்கில் சமனடைந்த இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி போட்டி செப்டம்பர் 25ஆம் தேதியன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டம் பெற்ற இந்தியா முதலில் பந்து வீசி ஆஸ்திரேலியாவை 200 ரன்களை தொட விடாமல் 20 ஓவர்களில் 187/4 ரன்களுக்கு மடக்கிப் பிடித்து. அதிகபட்சமாக தொடக்க வீரர் கேமரூன் கிரீன் அதிரடியாக 52 (21) ரன்களும் டிம் டேவிட் 54 (27) ரன்களும் எடுத்தனர்.

Virat Kohli Suryakumar Yadav

அதை துரத்திய இந்தியாவுக்கு ராகுல், ரோஹித் ஆகிய தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் 3வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த சூரியகுமார் அதிரடியாக 69 (36) ரன்களும் நிதானத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 63 (48) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் பாண்டியா 25* (16) ரன்கள் எடுத்து பினிஷிங் செய்ததால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா சொந்த மண்ணில் அவ்வளவு சுலபமாக எங்களை சாய்க்க முடியாது என்பதை நிரூபித்து உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. மேலும் 2 – 1 (3) என்ற கணக்கில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையை வென்ற இந்தியா தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

- Advertisement -

யானைக்கும் அடி சறுக்கும் என்ற வகையில் சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்றாலும் அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு இத்தொடரில் வென்றுள்ள இந்தியா மீண்டும் புத்துணர்ச்சியுடன் உலக கோப்பையை வெல்லும் பயணத்தில் வெற்றி நடை போடத் துவங்கியுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத் வெற்றியும் சேர்த்து இந்த வருடம் 21 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. இந்தியா : 21* (2022)
2. பாகிஸ்தான் : 20 (2021)
3. பாகிஸ்தான் : 17 (2018)

IND Japrit Bumrah

அதிலும் இப்படி 9 மாதங்களிலேயே இவ்வளவு பிரம்மாண்ட உலக சாதனையை படைத்துள்ள இந்தியா நிச்சயமாக ஆஸ்திரேலியாவிலும் வெற்றிப் பாதையில் நடந்து உலகக் கோப்பையை வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் உறுதியாக நம்பலாம். அதுபோக இந்த வருடம் சொந்த மண்ணில் இதுவரை பங்கேற்ற 14 டி20 போட்டிகளில் 10 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற ஜிம்பாப்வே சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இந்த வருடம் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை தலா 3 – 0 என்ற கணக்கில் அடுத்தடுத்த வைட்வாஷ் வெற்றியுடன் தோற்கடித்த இந்தியா தென்ஆப்பிரிக்காவிடம் 2 தோல்வியை சந்தித்தாலும் 2 வெற்றிகளை பெற்று தொடரை சமன் செய்தது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1 தோல்வியும் 2 வெற்றிகளை பதிவு செய்து இந்த சாதனையை இந்தியா படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. இந்தியா : 10* (2022)
2. ஜிம்பாப்வே : 9* (2022)
3. இந்தியா : 8 (2017)
4. வெஸ்ட் இண்டீஸ் : 8 (2021)

Advertisement