இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹார்டிக் பாண்டியா நியமிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி மும்பை அணியின் வீரர்கள் பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதோடு ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்ற ரோஹித் சர்மாவை ஓரம் கட்டி மும்பை அணியின் நிர்வாகம் எடுத்த இந்த முடிவு முன்னணி வீரர்கள் பலரையும் அதிருப்தி அடைய வைத்தது.
ரோகித் சர்மாவிற்கு பதிலாக புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பாண்டியா மிகச்சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நடைபெற்று வரும் இந்த தொடரில் முதல் அணியாக பாண்டியாவின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது.
ஏற்கனவே புதிய கேப்டனாக பாண்டியா நியமிக்கப்பட்ட போது ரோஹித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோருக்கு அதிருப்தி இருப்பதாக பேசப்பட்டு வந்த வேளையில் மேலும் சில வீரர்களும் ஹார்டிக் பாண்டியாவிற்கு ஆதரவாக இல்லாமல் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது.
அதோடு டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பாண்டியாவை சேர்க்க வேண்டாம் என்று ரோகித் சர்மா கருதியும் பிசிசிஐ அவரை சேர்த்தது மட்டுமின்றி துணை கேப்டன் பதவியையும் அளித்தது. அதனால் ரோகித் சர்மா ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு வீரராக சூரியகுமார் யாதவ் பாண்டியாவிற்கு எதிராக சில செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அடுத்ததாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கும் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஈடன் கார்டன் மைதானத்தில் பயிற்சி ஈடுபட்டிருந்த வேளையில் பாண்டியா பேட்டிங் செய்ய வந்தபோது சூர்யகுமார் யாதவ் பாதியிலேயே பயிற்சியை நிறுத்தி வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 48 வருடம் கழித்து சென்னையில் களமிறங்கும் இந்திய மகளிரணி.. மொத்தம் 4 போட்டிகள்.. அட்டவணை இதோ
அதுமட்டும் இன்றி ரோஹித் சர்மாவும் பயிற்சியில் இருந்து வெளியேறி கொல்கத்தா வீரர்களுடன் பேசிய புகைப்படங்களும் வெளியாகின. இப்படி ரோஹித் சர்மாவிற்கு அடுத்து சூரியகுமார் யாதவும் பயிற்சியில் இருந்து வெளியேறியது மும்பை அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.