209 ரன்கள் டார்கெட்ன்னு தெரிஞ்சதும் நான் போட்ட ஸ்கெட்ச் இதுதான்.. கெத்தாக பேசிய – கேப்டன் சூரியகுமார் யாதவ்

SKY
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதன்படி இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலில் இந்திய அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஜாஸ் இங்கிலீஷ் 110 ரன்களையும், ஸ்டீவன் ஸ்மித் 52 ரன்களையும் அடித்து அசத்தினர். பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி போட்டியை துவங்கிய இந்திய அணியானது 22 ரன்களில் 2 விக்கெட்டை இழந்து தடுமாறிய வேளையில் மூன்றாவது விக்கெட்டுக்கு இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

- Advertisement -

மூன்றாவது விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் சேர்ந்து 112 ரன்கள் சேர்த்து அசத்தினர். இஷான் கிஷன் ஒரு கட்டத்தில் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறிய வேளையில் சூரியகுமார் யாதவும் 80 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். பின்னர் கடைசி கட்டத்தில் ரிங்கு சிங் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறுகையில் :

இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. நாங்கள் பேட்டிங்கின் போது ஆரம்பத்திலேயே அழுத்தத்தை சந்தித்தாலும் அதன்பிறகு மீண்டு வந்த விதம் மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருக்கும். அந்த வகையில் நானும் இந்திய அணிக்காக விளையாடுவதை பெருமையாக கருதுகிறேன். அதோடு இன்று கேப்டனாக அறிமுகமாகி விளையாடியது மிகப்பெரிய தருணமாக நினைக்கிறேன்.

- Advertisement -

இந்த ஆட்டத்தின் போது இரண்டாவது பாதியில் டியூ வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நினைத்த அளவிற்கு டியூ வரவில்லை. அதோடு மைதானம் ஒன்றும் அவ்வளவு பெரியது இல்லை என்பதால் சேசிங் சற்று எளிதாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். அந்த வகையில் எங்களால் சிறப்பாக சேசிங் செய்ய முடிந்தது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 230 முதல் 235 ரன்கள் வரை அடிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க : வெறியா வந்துருக்காங்க.. இளம் இந்திய வீரர்களின் அந்த அனுபவத்தை சமாளிக்க முடியல.. ஆஸி கேப்டன் வருத்தம்

நானும் இஷான் கிஷனும் ஜோடி சேரும்போது அழுத்தத்தை எதிர்கொள்ளாமல் இயல்பான உன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்து என்று இஷான் கிஷனிடம் கூறினேன். மேலும் 10 ஓவர்கள் கடந்த பிறகு சேசிங் செய்ய வேண்டிய ரன்கள் எவ்வளவு என்று பார்த்துக் கொள்ளலாம் நீ அடித்து ஆடு என்று கூறினேன். அதன்படி நாங்கள் இருவருமே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் எளிதாக இலக்கை நோக்கி செல்ல முடிந்தது என்று கூறினார். மேலும் இந்த மைதானத்தில் ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு மிகவும் நன்றி என்றும் ரிங்கு சிங் அருமையாக போட்டியை முடித்துக் கொடுத்தார் என்றும் சூரியகுமார் யாதவ் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement