
கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவருக்கு அடுத்து இந்திய அணியின் புதிய துவக்க வீரருக்கான வாய்ப்பு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டது. அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பில் சஞ்சு சாம்சன் கடந்த ஆண்டு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
குறிப்பாக கடந்த 2024-ஆம் ஆண்டு மட்டும் 13 சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 180 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 43 ரன்கள் சராசரியுடனும் 436 ரன்களை குவித்திருந்தார். அதோடு ஒரே ஆண்டில் மூன்று டி20 சதங்களை அடித்த இந்திய வீரராகவும் சாதனை நிகழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் டி20 போட்டிகளில் தனக்கு கொடுக்கப்பட்ட அந்த துவக்க வீரருக்கான இடத்தை சஞ்சு சாம்சன் கெட்டியாக பிடித்துக் கொண்டார் என இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
இந்திய அணியில் தற்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான கேள்விக்கு இடமே இல்லை. ஏனெனில் சஞ்சு சாம்சன் தற்போது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஏழு-எட்டு போட்டியில் அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை நிரூபித்தும் காட்டி இருக்கிறார்.
ரோகித் சர்மாவுக்கு அடுத்து தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை சஞ்சு சாம்சன் கெட்டியாக பிடித்துக் கொண்டார். மேலும் அவரது திறமை என்ன என்பதை வெளிக்காட்டி உள்ளார். இனிவரும் போட்டியிலும் நிச்சயம் அவரே இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பார். உண்மையிலேயே அவரை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது என்று சூர்யகுமார் யாதவ் பாராட்டி பேசியுள்ளார்.
இதையும் படிங்க : எம்.எஸ் தோனியின் முக்கிய சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சஞ்சு சாம்சன் – விவரம் இதோ
நீண்ட வருடமாக இந்திய அணியில் நிரந்தர வாய்ப்பின்றி தவித்து வந்த சஞ்சு சாம்சன் சீனியர் வீரர்களின் ஓய்வு காரணமாக தற்போது தான் நிரந்தர இடத்தை பிடித்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.