இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று ஜனவரி 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த முதலாவது டி20 போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தோனியை முறியடிக்க காத்திருக்கும் சஞ்சு சாம்சன் :
ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடரினை வென்று சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியானது அடுத்தடுத்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி முக்கிய டி20 தொடர்களை கைப்பற்றி வருகிறது.
குறிப்பாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்த இந்திய அணி இளம் வீரர்களை கொண்ட புதிய அணி என்பதனால் இந்த அணியின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. டி20 போட்டிகளில் தற்போது துவக்க வீரராக இடம் பிடித்து விளையாடி வரும் சஞ்சு சாம்சன் தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான இந்த தொடரில் சஞ்சு சாம்சன் முன்னாள் கேப்டனான மஹேந்திர சிங் தோனியின் மிகப்பெரிய சாதனை ஒன்றை முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
அந்த வகையில் டி20 போட்டிகளை பொருத்தவரை சர்வதேச கிரிக்கெட்டில் தோனி 98 போட்டிகளில் விளையாடி 52 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அதே வேளையில் சஞ்சு சாம்சன் 37 போட்டிகளில் விளையாடி 46 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் அவர் மேலும் 6 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் தோனியின் சிக்ஸர்கள் சாதனையை சமன் செய்வார்.
இதையும் படிங்க : இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ
அதுமட்டும் இன்றி இது தொடரில் அவர் 7 சிக்ஸர்களை விளாசினால் தோனியை கடந்து அதிக சிக்ஸர்களை டி20 போட்டிகளில் அடித்த வீரர் என்ற சாதனையும் நிகழ்த்துவார். இந்த தொடரிலேயே அந்த சாதனையை சஞ்சு சாம்சன் நிகழ்த்த அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



