
இந்திய அணியின் இளம் மிடில் ஆர்டர் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் இதுவரை 115 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2341 ரன்களை குவித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக அவர் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும் மும்பை அணிக்காக விளையாடி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் அறிமுகமானார்.
அப்படி இந்திய அணிக்காக அறிமுகமானதிலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 197 ரன்களையும், 11 டி20 போட்டிகளில் விளையாடி 244 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு அரை சதமும், டி20 கிரிக்கெட்டில் மூன்று அரை சதமும் அடித்து தனது தனது பிரமாதமான பார்மை நிரூபித்துள்ளார்.
இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் விளையாடும் இன்னிங்ஸ்களை பார்த்து அவரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வீரருடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நிருபர் ஒருவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் பெவன் போல் சூர்யகுமார் யாதவ் விளையாடுகிறார் என்று தெரிவித்தார்.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டிக்கு பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யகுமார் யாதவ் கலந்து கொண்டார்.
அப்போது அங்கிருந்த நிருபர் ஒருவர் அவரையும் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் பெவனையும் ஒப்பிட்டு ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு சூரியகுமார் சிறப்பான பதில் கொடுத்தார். அதில் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் : என்னை யாரிடமும் ஒப்பிட்டு பேச வேண்டாம். என்னை சூரியகுமாராகவே இருக்க விடுங்கள். நான் இந்திய அணிக்காக மிகக் குறைவான போட்டிகளில் தான் விளையாடி உள்ளேன். நான் ஒன்றை மட்டும் தொடர்ந்து செய்வேன்.
இதையும் படிங்க : விராட் கோலி மீது கைவைத்த பிசிசிஐ. இலங்கை தொடரில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் – விவரம் இதோ
எனக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளை வீணடிக்காமல் எந்த இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். அது மட்டுமே என்னுடைய இலக்கு அதை நான் தொடர்ந்து செய்வேன். எனது பாணியில் அதிரடியாக அச்சமின்றி தொடர்ந்து விளையாடுவேன் என பத்திரிகையாளருக்கு அவர் சரியான பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.