சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அவர்களை 146 ரன்களுக்கு சுருட்டியது. பின்னர் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்தி விளையாடிய இந்திய அணியானது 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தனது ஊதியத்தை நன்கொடையாக வழங்கிய சூரியகுமார் யாதவ் :
இந்திய அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் தற்போது நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். 17-வது ஆசியக் கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தையும் தக்க வைத்துள்ளனர். எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி பெற்ற இந்த மாபெரும் வெற்றி ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி வீரர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஆசிய கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் கோப்பையை வாங்கவில்லை என்றாலும் தங்களது வெற்றி கொண்டாட்டத்தை மைதானத்திலேயே மகிழ்ச்சியாக வெளிப்படுத்தி இருந்தனர். இந்த தொடர் முழுவதுமே பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகளில் விளையாடிய இந்திய அணி மூன்றிலும் வெற்றி பெற்று தக்க பதிலடி கொடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய போட்டிகளுக்கான தன்னுடைய முழு சம்பளத்தையும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
நான் செய்வது சரியா? தவறா? என்று தெரியவில்லை இருந்தாலும் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான என்னுடைய முழு ஊதியத்தையும் நான் பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் அளிக்க விரும்புகிறேன் என்று தனது பெருந்தன்மையை வெளிக்காட்டினார்.
இதையும் படிங்க : இந்தியா 20/3.. இது மும்பை ஐபிஎல் இல்ல தம்பி.. வம்பிழுத்த பாகிஸ்தான் வீரர்.. தோல்வியை பரிசாக கொடுத்த திலக் வர்மா
இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவுக்கு மொத்தம் 28 லட்ச ரூபாய் ஊதியம் கிடைத்துள்ளது. அதனை அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுதவிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஒட்டுமொத்தமாக 21 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



