
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று பல்லக்கல்லே நகரில் நடைபெற்று முடிந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவர் வரை சென்று அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதிலும் குறிப்பாக நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் கேப்டனாக சூரியகுமார் யாதவ் எடுத்த சில முடிவுகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டை பெற்றுள்ளன. யாருமே யோசித்துப் பார்க்க முடியாத அளவிற்கு சில தைரியமான முடிவுகளை கேப்டனாக கையில் எடுத்த சூரியகுமார் யாதவ் இந்திய அணிக்கு வெற்றியையும் தேடித் தந்துள்ளார் என்றால் அது மிகையல்ல.
ஏனெனில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 100 ரன்களை கடந்த பின்னரும் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது.
இதன் காரணமாக இலங்கைய அணியே எளிதில் வெற்றி பெறும் என்று நினைத்தனர். அதேபோன்று கடைசி இரண்டு ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அனைவரும் பந்துவீசி விட்டதால் கடைசி இரண்டு ஓவர்களை கலீல் அகமது மற்றும் சிராஜ் ஆகியோரே வீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த நேரத்தில் ஒரு தைரியமான முடிவை கையில் எடுத்த சூரியகுமார் யாதவ் 19-ஆவது ஓவரை ரிங் சிங்கிடம் வழங்கினார். அந்த ஓவரில் ரிங்கு சிங் 2 விக்கெட்டை வீழ்த்தியதோடு மட்டுமின்றி 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். பின்னர் கடைசி ஓவரை தானே வீச முன்வந்த சூரியகுமார் யாதவ் அந்த ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தி 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
இதையும் படிங்க : ரோஹித் மாதிரியே எடுத்த 2 முடிவே வெற்றிக்கு காரணம்.. சூரியகுமார் கேப்டனாக இதை விட என்ன வேணும்.. ஃகைப்
இதன்மூலம் போட்டி டை ஆனதோடு மட்டுமின்றி சூப்பர் ஓவர் வரை சென்று இந்திய அணி வெற்றியும் பெற்றது. இப்படி சூரியகுமார் யாதவ் எடுத்த சில முடிவுகள் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.