இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த டி20 தொடரை 3 – 0 (3) கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற 3வது போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கையை தோற்கடித்த இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. பல்லக்கேல் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 137/9 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக கில் 39, வாஷிங்டன் சுந்தர் 25, ரியான் பராக் 26 ரன்கள் எடுத்தனர். பின்னர் பேட்டிங் செய்த இலங்கையும் 20 ஓவரில் 137/8 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 43, குசால் பெரேரா 46 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், கேப்டன் சூரியக்குமார், ரிங்கு சிங் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
வேற என்ன வேணும்:
அதன் பின் வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 2 ரன் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து இலங்கையை ஆல் அவுட்டாக்கினார். அதன் பின் தீக்சனா வீசிய சூப்பர் ஓவரில் 3 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து சூரியகுமார் வெற்றி பெற வைத்தார். அதனால் இலங்கையை அதனுடைய சொந்த மண்ணில் ஒய்ட்வாஷ் செய்து இந்தியா கோப்பையை வென்றது.
அத்துடன் புதிய கேப்டன் சூரியகுமார் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் இந்தியா முதல் தொடரிலேயே ஒய்ட் வாஷ் வெற்றியை பெற்று தங்களது பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது. இந்நிலையில் கடைசி 2 ஓவரில் இலங்கைக்கு வெறும் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது இந்தியா தோற்கும் என்று நினைத்ததாக முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.
ஆனால் அப்போது யாருமே சிந்திக்காத வகையில் 19வது ஓவரை ரிங்கு சிங்கிடமும் 20வது ஓவரை தாமும் வீசும் முடிவை சூரியகுமார் எடுத்ததே வெற்றியை கொடுத்ததாக கைஃப் பாராட்டியுள்ளார். அந்த வகையில் ரோஹித் சர்மா போலவே அசத்திய சூரியகுமார் இதை விட தம்மை சிறந்த கேப்டன் என்று நிரூபிக்க முடியாது என்றும் கைஃப் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ரொம்ப சிம்பிள் பிளான்.. எனக்கு சொன்ன சூர்யா பாய் கடைசியில் ட்விஸ்ட் வெச்சாரு.. ரியான் பராக் பேட்டி
அத்துடன் ரோஹித் சர்மாவின் இடத்தில் சூரியகுமார் செயல்படுவதற்கு தகுதியான கேப்டன் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் கைப் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பாய் ரோகித் சர்மா போலவே சூரியகுமார் அசத்தியுள்ளார். 19வது ஓவரை ரிங்குவும் 20வது ஓவரை சூரியகுமாரும் வீசியதே போட்டியில் வெற்றியை கொடுத்தது. சிறந்த தலைவராக இருக்க இதை விட வேறு என்ன வேண்டும்?” என்று பாராட்டியுள்ளார்.



