இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், நிக்கலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பூரன் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்யவே இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது.

அதன்படி இந்திய அணி முதலில் விளையாடி பெரிய ரன் குவிப்பில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். பின்னர் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை ஓரளவு டீசன்ட்டான ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றனர். ராகுல் 49 ரன்களும், சூரியகுமார் யாதவ் 64 ரன்களும் குவித்தனர்.
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் குவித்தது. பின்னர் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் காரணமாக 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் யாரும் படைக்காத ஒரு அற்புதமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதன்படி 31 வயதான சூர்யகுமார் யாதவ் இதுவரை இந்திய அணிக்காக 6 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார். இந்த 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் தான் விளையாடிய அனைத்து இன்னிங்ஸ்களிலும் 30 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.
இப்படி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி முதல் 6 போட்டியில் தொடர்ந்து 30 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் சர்வதேச கிரிக்கெட்டில் படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக ரயான் டென் டெஸ்கோத்தே, டாம் கூப்பர் மற்றும் பாகிஸ்தான் வீரர் பக்கர் சமான் ஆகியோர் முதல் 5 போட்டிகளில் 30 ரன்களை கடந்து உள்ளனர்.
இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரா வெற்றி! பாகிஸ்தானின் உலகசாதனையை சமன் செய்து இந்தியா அபாரம்
ஆனால் சூர்யகுமார் யாதவ் தான் விளையாடிய 6 போட்டிகளிலுமே 30 ரன்களுக்கு மேல் கடந்துள்ளார். இதில் அவர் 2 அரைசதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் அவர் அடித்த 64 ரன்களே சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அடித்த அதிகபட்ச ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



