செல்லும் இடமெல்லாம் வெற்றி – நட்சத்திரங்கள் பாராட்டும் இந்திய கிரிக்கெட்டின் கோச் பற்றிய அலசல்

Ranji Trophy Chandrakant Pandit And Aditya Srivastava
- Advertisement -

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ரஞ்சி கோப்பையின் 2021/22 சீசன் பெங்களூருவில் கோலாகலமாக நிறைவு பெற்றது. இந்த வருடம் 2 பாகங்களாக நடைபெற்ற இந்தத் தொடரில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய மத்திய பிரதேசம் மற்றும் மும்பை ஆகிய அணிகள் ஃபைனலுக்கு தகுதி பெற்றன. அதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி மைதானத்தில் ஜூன் 22இல் துவங்கிய மாபெரும் இறுதிப்போட்டியில் 41 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ரஞ்சி அணியாக சாதனை படைத்துள்ள மும்பையை ஒரு கோப்பையை கூட வெல்லாத மத்திய பிரதேசம் எதிர்கொண்டது.

அப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் இன்னிங்சில் 374 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் பிரிதிவி ஷா 47, ஜெய்ஸ்வால் 78 என தொடக்க வீரர்கள் நல்ல ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில் அர்மன் ஜாபர் 26, சுவேட் பார்க்கர் 18, ஹர்டிக் தோமர் 24, சாம்ஸ் முலானி 12 என அந்த அணியின் முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் அசத்திய சர்பராஸ் கான் சதமடித்து 134 ரன்கள் குவித்து ஓரளவு காப்பாற்றினார். மத்தியபிரதேசம் சார்பில் அதிகபட்சமாக கெளரவ் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

ம.பி சரித்திரம்:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த மத்திய பிரதேசம் நிதானமாகவும் அற்புதமாகவும் பேட்டிங் செய்து 536 ரன்களை குவித்தது. அந்த அணிக்கு ஹிமான்சு மன்ட்ரி 31, கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா 25, அக்சட் ரகுவன்ஷி 9 போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் யாஷ் துபே 133, சுபம் சர்மா 116, ரஜத் படிதார் 122 என 3 பேட்ஸ்மேன்கள் சதமடித்து மிரட்டினார்கள். மும்பை சார்பில் அதிகபட்சமாக சாம்ஸ் முலானி 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதனால் 162 ரன்கள் பின்தங்கிய மும்பையை 2-வது இன்னிங்சில் பெரிய ரன்களை எடுக்க விடாமல் மடக்கிப்பிடித்த மத்திய பிரதேசம் வெறும் 269 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. மும்பைக்கு பிரிதிவி ஷா 44, ஹர்டிக் டாமோர் 25, அர்மன் ஜாபர் 37, சுவேட் பார்க்கர் 51, சர்பிராஸ் கான் 45 என முக்கிய பேட்ஸ்மேன்கள் நல்ல தொடக்கத்தை பெற்றாலும் பெரிய ரன்களை எடுக்காமல் ஏமாற்றமளித்தனர். மத்தியபிரதேசம் சார்பில் அதிகபட்சமாக குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து 108 என்ற சுலபமான இலக்கை துரத்திய மத்திய பிரதேசத்துக்கு ஹிமான்சு மன்ட்ரி 37, சுபம் சர்மா 30, ரஜத் படிதார் 30* என முக்கிய பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்கள் எடுத்ததால் 108/4 ரன்களை எடுத்த அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனால் வலுவான மும்பையை மண்ணைக் கவ்வ வைத்த மத்திய பிரதேசம் வரலாற்றில் முதல் ரஞ்சிக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

இந்தியாவின் துரோனாச்சாரியார்:
அப்போட்டி முடிவின்போது மத்தியபிரதேச அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் கலங்கிய கண்களுடன் பெவிலியனில் இருந்து ஓடி வந்து ரசிகர்களை கும்பிட்டு தனது அணி வீரர்களை கட்டி அணைத்தது பார்ப்பவர்களின் நெஞ்சங்களை தொட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே 2011 உலக கோப்பையில் சச்சினை தோள் மீது சுமந்ததைப்போல அவரை தோளில் தூக்கிய மத்தியபிரதேச வீரர்கள் பெங்களூரு மைதானத்தை உலா வந்தனர். கடந்த 1999 ரஞ்சி கோப்பையில் அவரது தலைமையில் முதலும் கடைசியுமாக இறுதிப்போட்டிக்கு சென்ற மத்திய பிரதேசம் இதே பெங்களூரு மைதானத்தில் கர்நாடகாவிடம் தோற்றுப்போனது.

- Advertisement -

ஆனால் 23 வருடங்கள் கழித்து இதே பெங்களூரு மைதானத்தில் பயிற்சியாளராக வந்து வைராக்கியத்துடன் அவர் ரஞ்சிக் கோப்பையை முத்தமிட்டது பல முன்னாள் வீரர்களின் பாராட்டுக்களை பெற்றது. அதிலும் தமிழகத்தின் நட்சத்திரம் தினேஷ் கார்த்திக் இவரை கால்பந்தின் பிரபல பயிற்சியாளரான அலெஸ் பெர்குசனுடன் ஒப்பிட்டு ரஞ்சி கோப்பையின் அலெக்ஸ் பெர்குசன் என்று பாராட்டினார்.

அதற்கு காரணம் என்னவெனில் ஒரு கேப்டனாக, வீரராக ரஞ்சிக் கோப்பையை தொடமுடியாத இவர் ஓய்வு பெற்ற சில வருடங்களிலேயே மனம் தளராமல் அந்த கோப்பையை தொட்டே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் பயிற்சியாளராக உருவெடுத்தார். இவரின் திறமையை பார்த்த வெற்றிகரமான மும்பை அணி நிர்வாகம் தங்களது பயிற்சியாளராக நியமித்தது. அவரது ஆலோசனைகளால் அசத்திய மும்பை 2003, 2004 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் கோப்பையை வென்று 2014 சீசனிலும் சாம்பியன் பட்டத்தை வென்றது.

- Advertisement -

அதனால் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் புகழ் பெற்ற இவரை விதர்பா அணி நிர்வாகம் தங்களுக்கு பயிற்சியாளராக நியமித்தது. அதிலும் அசத்திய இவரது தலைமையில் 2018இல் முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்த விதர்பா அடுத்த 2019 சீசனிலும் அபார வெற்றி பெற்றது. இப்படி வெளிமாநிலங்களுக்கு கோப்பையை வென்று கொடுக்க முடிந்த தம்மால் ஏன் நமது சொந்த மாநிலத்திற்கு வெல்ல முடியாது என்று எண்ணிய இவர் 2020 சீசன் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2021/22 சீசனில் தனது சொந்த மாநில அணியுடன் இணைந்து அதன் வீரர்களை சரியான வகையில் வழிநடத்தினார்.

அவரின் வைராக்கியத்தின் பயனாக 1999க்கு பின்பு இறுதிப்போட்டிக்கு சென்றது மட்டுமல்லாமல் அவரது தலைமையில் மத்தியப் பிரதேசமும் முதல் கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளது. மொத்தத்தில் கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பது போல் மும்பை, விதர்பா ஆகிய அணிகளை தொடர்ந்து மத்திய பிரதேசத்துக்காகவும் கோப்பையை வென்றுள்ள இவர் 3 வெவ்வேறு மாநிலங்களுடன் வெவ்வேறு வீரர்களுடன் இணைந்து பணியாற்றினாலும் தனது பயிற்சி யுக்தியை வெற்றிக் கோப்பையாக மாற்றி காட்டியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs ENG : ரோஹித் சந்தேகம், இந்தியாவை வழிநடத்த அவர்தான் சரியானவர் – முன்னாள் பாக் வீரர் கருத்து

அதனால் எந்தவித தயக்கமும் இல்லாமல் இவரை இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் துரோணாச்சாரியார் என்று அழைத்தால் அது மிகையாகாது.

Advertisement