மீண்டும் மதிக்காத ஹைதராபாத்! வார்னரை தொடர்ந்து கடுப்பில் வெளியேறிய மற்றொரு ஆஸ்திரேலியர் – என்ன நடந்தது?

SRH
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் மெகா அளவில் பெங்களூரில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதில் பங்கேற்ற அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை பல கோடி ரூபாய் செலவில் வாங்கியுள்ளன. இந்த ஏலத்தின் முடிவில் 204 வீரர்கள் வாங்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக 551 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

srh

- Advertisement -

இந்த ஏலத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசெர்ஸ் ஹைதெராபாத் அணி நிர்வாகம் 89.90 கோடிகளை செலவு செய்து 23 வீரர்களை வாங்கியுள்ளது. இதில் 15 இந்திய வீரர்களும் 8 வெளிநாட்டு வீரர்களும் இடம் பிடித்துள்ளார்கள்.

வெளியேறிய சைமன் கேட்டிச்:
முன்னதாக இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா, தென்னாபிரிக்காவின் ஜாம்பவான் டேல் ஸ்டைன், ஆஸ்திரேலியாவின் சைமன் கேட்டிச் மற்றும் தமிழகத்தின் ஹேமங் பதானி ஆகியோரை தங்கள் அணியின் பயிற்சியாளராக அறிவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதிரடி காட்டியது. ஏற்கனவே முத்தையா முரளிதரன், டாம் மூடி போன்ற தரமான பயிற்சியாளர்கள் இருந்த வேளையில் லாரா, ஸ்டைன் போன்ற ஜாம்பவான்களை பயிற்சியாளராக நியமித்ததால் இந்த முறை எப்படியும் கோப்பையை வென்று விடலாம் என்ற மகிழ்ச்சியுடன் அந்த அணி ரசிகர்கள் இருந்தார்கள்.

Kavya

இந்நிலையில் சன் ரைசெர்ஸ் ஹைதெராபாத் அணியின் துணை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டிருந்த ஆஸ்திரேலியாவின் “சைமன் கேட்டிச்’ அந்தப் பதவியில் இருந்து திடீரென விலகியுள்ளதாக ஆஸ்திரேலியாவின் பிரபலமான “தி ஆஸ்திரேலியன்” பத்திரிக்கையில் திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2022 தொடருக்காக துணை பயிற்சியாளராக செயல்பட நியமனம் செய்யப்பட்ட அவர் இந்த சீசன் துவங்குவதற்கு முன்பாகவே இப்படி திடீரென அந்த பதவியிலிருந்து விலகியுள்ளது பெரிய அதிர்ச்சியையும் சர்ச்சையையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.

- Advertisement -

என்ன நடந்தது:
இதற்கான காரணம் என்னவென்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அவரின் ராஜினாமாவை காவியா மாறன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் ஏற்றுக் கொண்டதா அல்லது மறு பரிசீலனை செய்ய கேட்டுக்கொண்டதா என்ற தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்துக்கு முன்பாக எந்தெந்த வீரர்களை வாங்க வேண்டும் என்ற முடிவை சைமன் கேட்டிச் உள்ளிட்ட பயிற்சியாளர்களுடன் விவாதித்த பின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருந்ததாக தெரிகிறது.

Simon Katich

ஆனால் அதன்பின் நடந்த ஏலத்தில் ஏற்கனவே திட்டமிட்ட வீரர்களை வாங்காமல் நிக்கோலஸ் பூரான் (10.75 கோடி), வாஷிங்டன் சுந்தர் (8.75 கோடி), ராகுல் திரிப்பாதி (8.5 கோடி) போன்ற வீரர்களை அதுவும் மிகப்பெரிய தொகைக்கு பயிற்சியாளர்களை கேட்காமல் அந்த அணி நிர்வாகம் வாங்கியதாக தெரியவருகிறது. இதில் குறிப்பாக நிக்கோலஸ் பூரான் கடந்த ஐபிஎல் 2021 தொடரில் 12 போட்டிகளில் பங்கேற்று 4 டக்-அவுட் உட்பட வெறும் 85 மட்டுமே எடுத்திருந்தார்.

- Advertisement -

மேலும் இதற்கு முந்தைய ஐபிஎல் தொடர்களில் பெரிய அளவில் சோபிக்க தவறியதுடன் இதுவரை இந்தியாவிற்காக விளையாடாத அபிஷேக் சர்மாவை 6.5 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கியது ஹைதெராபாத் பயிற்சியாளர் குழுவில் உள்ள ஒரு சிலருக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை என தெரிகிறது.

Simon Katich

குறிப்பாக இதுபோன்ற ஒருசில மோசமான வீரர்களைபெரிய தொகைக்கு தேர்வு செய்ததால் துணை பயிற்சியாளார் சைமன் கேட்டிச் மிகவும் அதிருப்தி அடைந்ததாக தெரிய வருகிறது. மேலும் ரோமரியோ ஷெபார்ட் போன்ற வீரர்களையும் அந்த அணி கண்ணை மூடிக்கொண்டு வாங்கிவிட்டதாக சைமன் கேட்டிச் கோபப்பட்டுள்ளார். அதாவது கேட்ட வீரர்களை வாங்காமல் வேறு வீரர்களை வாங்கினால் அவர்களை வைத்து எப்படி கோப்பையை வெல்வது என்ற நோக்கத்துடன் சைமன் கேட்டிச் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

வார்னரை தொடர்ந்து:
மொத்தத்தில் தனது பேச்சுக்கு மரியாதையும் மதிப்பும் கொடுக்காத சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இருந்து சைமன் கேட்டிச் விலகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏற்கனவே கடந்த பல வருடங்களாக அந்த அணிக்கு முக்கிய வீரராகவும் கேப்டனாகவும் விளையாடி வந்த ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னரை கடந்த வருடம் ஹைதராபாத் அணி நிர்வாகம் நடத்திய விதம் பெரிய சர்ச்சைக்கு உள்ளானது.

இதையும் படிங்க : 2017இல் நடந்ததை வைத்துக்கொண்டு இனியும் காலம் தள்ளமுடியாது – நட்சத்திர வீரருக்கு வலுக்கும் எதிர்ப்பு

2016ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார் என்ற நன்றி கூட இல்லாமல் அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிய ஹைதெராபாத் அணி நிர்வாகம் அதன் பின் அவரை விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இருந்து நீக்கி அவமானப் படுத்தியது. அதனால் மனமுடைந்த அவர் தற்போது இந்த சீசனில் டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். தற்போது அவரைப் போலவே மற்றொரு ஆஸ்திரேலியர் சைமன் கேட்டிச் ஹைதராபாத் அணியில் இருந்து விலகியுள்ளதால் அந்த அணி நிர்வாகம் மீது ரசிகர்கள் கடும் கோபம் அடைந்துள்ளார்கள்.

Advertisement