
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நவீன கிரிக்கெட்டின் நாயகனாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அதே போல ஐபிஎல் 8000+ ரன்களை அடித்த ஒரே வீரராக சாதனை படைத்துள்ள அவர் இந்த வருடம் கூட ஆரஞ்சு தொப்பியை வென்று அற்புதமாக செயல்பட்டார்.
முன்னதாக விராட் கோலி பெரிய ரன்கள் எடுக்கும் போதெல்லாம் சுயநலத்துடன் சொந்த சாதனைகளுக்காக விளையாடுவதாக விமர்சனங்கள் எழுவது வழக்கமாகும். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் நங்கூரமாக விளையாடும் ஸ்டைலை கொண்டுள்ள அவர் கொஞ்சம் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதனால் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி சுனில் காவாஸ்கர் போன்ற சில முன்னாள் வீரர்கள் விமர்சிப்பது வாடிக்கையாகும்.
மோசமான ரசிகர்கள்:
அந்த வரிசையில் இந்த வருடம் லக்னோவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 32 பந்துகளில் 42 ரன்கள் அடித்தார். ஆனால் அப்போது அரை சதமடிப்பதற்காக மெதுவாக விளையாடிய அவர் அடுத்த 10 பந்துகளில் 8 ரன்கள் அடித்து 50 ரகளை தொட்டார். அதை முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் சைமன் டௌல் ஒளிவு மறைவின்றி நேரலையில் கடுமையாக விமர்சித்தார். அதற்கு விராட் கோலியின் ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் விராட் கோலியை பற்றி விமர்சித்த போது சில ரசிகர்கள் தங்களுடைய உயிருக்கு பங்கம் விளைவிப்போம் என்று அச்சுறுத்தியதாக சைமன் டௌல் வேதனை தெரிவித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி அவுட்டாவதைப் பற்றி அதிகமாக கவலைப்படுகிறார். அதுவே என்னுடைய கருத்தாகும். விராட் கோலியை பற்றி நான் 1000 மகத்தான விஷயங்களை கூறியுள்ளேன்”
“ஆனால் ஒரு எதிர்மறையான விஷயம் அல்லது மோசமான கருத்தை சொன்னதற்காக எனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் வந்தன. அது மிகவும் அவமானமாகும். இருப்பினும் அது எப்போதுமே தனிப்பட்ட முறையில் விராட் கோலி பற்றி சொல்வது கிடையாது. நாங்கள் மகிழ்ச்சியான உரையாடல்களை கொண்டுள்ளோம். டாஸ் வீசும் போது பலமுறை நான் அவரிடம் பேட்டி எடுத்துள்ளேன்”
இதையும் படிங்க: அப்படியா சொல்லவே இல்ல.. கேப்டனான எனக்கே தெரியாம எப்ப அடிச்ச? குல்தீப் யாதவை கலாய்த்த ரோஹித்
“போட்டி முடிந்த பின்பும் நாங்கள் எதைப் பற்றியும் பேசியதில்லை. எனவே அது ஒரு பிரச்சினையாகவே இருந்ததில்லை. இதே போல பாபர் அசாம் பற்றியும் பேசினேன். அப்போது போட்டி முடிந்ததும் தன்னுடைய பயிற்சியாளர்களும் நீங்கள் சொன்னதையே தன்னிடம் சொன்னதாக பாபர் அசாம் என்னிடம் தெரிவித்தார்” என்று கூறினார். அதாவது தாம் விமர்சித்தாலும் விராட் கோலி அதை நேர்மறையாகவே எடுத்துக் கொள்வதாக சைமன் கூறியுள்ளார். ஆனால் அவருடைய ரசிகர்கள் தான் மிரட்டல் விடுப்பதாக அவர் கூறுவது குறிப்பிடத்தக்கது.