ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 7ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற 51வது லீக் போட்டியில் லக்னோவை 56 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் 8வது வெற்றியை பதிவு செய்து தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்து கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிக் செய்த குஜராத் சுப்மன் கில் 94* (51) ரிதிமான் சஹா 81 (43) ஹர்டிக் பாண்டியா 25 (15) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்களை குவித்ததால் 20 ஓவர்களில் 227/2 ரன்கள் எடுத்தது.

அதை துரத்திய லக்னோவுக்கு கெய்ல் மேயர்ஸ் 48 (32) குயின்டன் டீ காக் 70 (41) என தொடக்க வீரர்கள் அதிரடியாக ரன்களை குவித்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் அபாரமாக செயல்பட்ட குஜராத் தீபக் ஹூடா 11, மார்கஸ் ஸ்டோனிஸ் 4, நிக்கோலஸ் பூரான் 3, கேப்டன் க்ருனால் பாண்டியா 0 என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி 20 ஓவர்களில் லக்னோவை 171/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தி பெரிய வெற்றியை சுவைத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மோகித் சர்மா 4 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய போதிலும் 94* ரன்களை விளாசிய சுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
சோர்வும் சுயநலமும்:
சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது வரிசையில் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு சமீப காலங்களில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அட்டகாசமாக செயல்பட்டு வரும் அவர் இந்த போட்டியில் 142 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ரித்திமான் சஹாவுடன் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடி சதத்தை நெருங்கினார். இருப்பினும் பகல் நேரத்தில் வெயிலில் நடைபெற்ற அந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை விளையாடியதால் சோர்வடைந்த அவர் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறினார்.

இந்நிலையில் அது போன்ற சமயங்களில் வெயில் காரணமாக சோர்வடைந்ததில் எந்த தவறுமில்லை என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் சைமன் டௌல் நம்மால் அதிரடியாக விளையாட முடியவில்லை என்று உணரும் போது சதத்துக்காக சுயநலத்துடன் விளையாடாமல் இம்பேக்ட் விதிமுறையை போல ரிட்டையர்ட் ஹர்ட் விதிமுறையை பயன்படுத்தி சுப்மன் கில் பெவிலியனுக்கு சென்று அடுத்ததாக காத்திருக்கும் ராகுல் திவாடியா போன்ற அதிரடி வீரருக்கு வழி விட்டிருக்க வேண்டுமென அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் மிகவும் சோர்வடைந்தார். குறிப்பாக கடைசி நேரத்தில் தம்மால் முடிந்த பவுண்டரிகளை அடிக்க முடியாமல் அவர் தடுமாறினார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் சொல்வது உங்களுக்கு சர்ச்சையாக தோன்றும். ஆனால் பகல் வேளையில் நடைபெற்ற அந்த போட்டியில் 45 பந்துகளில் 75 அல்லது 85 ரன்களை எடுத்த நீங்கள் 45 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் தொடர்ந்து விளையாட முடியாது என்பதால் “சரி இனிமேல் ராகுல் திவாடியா விளையாடட்டும்” என்ற எண்ணத்துடன் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி சென்றிருக்க வேண்டும்”

“குறிப்பாக கிரிக்கெட்டில் சாதனைகள் முக்கியமல்ல என்பதை நான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். இருப்பினும் சதம் என்பது பெரியது என்று அனைவரும் சொல்வார்கள் என்பதையும் நான் அறிவேன். ஆம் சதம் என்பது நீங்கள் வெல்லும் போது மிகவும் பெரியது தான். ஆனால் தோற்கும் போது உபயோகமில்லாதது. எனவே இந்த நவீன கிரிக்கெட்டில் இவரைப் போன்ற இளம் வீரர்கள் சோர்வடைந்ததும் பவுண்டரிகளை அடிக்க முடியாத சமயத்தில் அடுத்த வீரர்களுக்கு வழி விட வேண்டும். உங்களது வீரர்கள் வங்கியில் அதிரடியாக விளையாடுபவர் இருக்கும் போது ஏன் அதை அணியின் நலனுக்காக செய்யக்கூடாது” என்று கூறினார்.
இதையும் படிங்க: WTC : டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் கே.எல் ராகுலுக்கு பதில் இவரே விளையாடனும் – ரவி சாஸ்திரி கருத்து
முன்னதாக பாபர் அசாம் மற்றும் விராட் கோலி ஆகியோரும் சொந்த சாதனைகளுக்காக 40, 90 ரன்களை தொட்டதும் மெதுவாக விளையாடுவதாக சமீபத்தில் அவர் விமர்சித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



