வீடியோ : சதமடிச்சு சாதனை படைச்சு என்ன புண்ணியம், பாபர் அசாமை விளாசிய சைமன் டௌல் – நடந்தது என்ன

- Advertisement -

பாகிஸ்தானில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2023 பிஎஸ்எல் தொடரில் மார்ச் 8ஆம் தேதியன்று நடைபெற்ற 25வது லீக் போட்டியில் பெஷாவர் ஜால்மி மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. ராவில்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் பாபர் அசாமுடன் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து நேரம் செல்ல செல்ல விரைவாக ரன்களை சேர்த்து 162 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த சாய்ம் ஆயுப் 6 பவுண்டரி 5 சிக்சருடன் 74 (34) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அவருடன் மறுபுறம் ஆரம்பம் முதலே நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட பாபர் அசாம் நேரம் செல்ல செல்ல விரைவாக ரன்களை சேர்த்து சதமடித்து 15 பவுண்டரி 3 சிக்சருடன் 115 (65) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் ரோவ்மன் போவல் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 35* (18) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் பெஷாவர் 240/2 ரன்களை குவித்து அசத்தியது. அதைத் தொடர்ந்து 241 என்ற கடினமான இலக்கை துரத்திய குயிட்டா அணிக்கு மார்ட்டின் கப்டில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் மிரட்டலான 21 (8) ரன்கள் குவித்து நல்ல தொடக்கம் கொடுத்து அவுட்டானார்.

- Advertisement -

என்ன புண்ணியம்:
ஆனால் மறுபுறம் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய ஜேசன் ராய் வழக்கத்திற்கு மாறாக இப்போட்டியில் முரட்டுத்தனமான பேட்டிங் செய்து பெஷாவர் பவுலர்களை பந்தாடினார். அவருடன் பெயருக்காக 26 (22) ரன்கள் குவித்து 2வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வில் ஸ்மெட் 12வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் சரமாரியாக அடித்து நொறுக்கி சதமடித்தும் ஓயாத ஜேசன் ராய் 20 பவுண்டரி 5 சிக்சருடன் 145* (63) ரன்கள் எடுத்தார். அவருடன் முகமது ஹபீஸ் தனது பங்கிற்கு 6 பவுண்டரி 2 சிக்சருடன் 41* (18) ரன்கள் குவித்ததால் 18.2 ஓவரிலேயே 243/2 ரன்கள் எடுத்த குயிட்டா 8 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

அதனால் டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 2வது பேட்ஸ்மேன் என்ற டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், மைக்கேல் க்ளிங்கர் (தலா 8) ஆகியோரது சாதனையை சமன் செய்து ஆசிய அளவில் அதிக டி20 சதங்களை அடித்த வீரராக சாதனை படைத்த பாபர் அசாமின் சதம் வீணானது. சமீப காலங்களாகவே பெரிய ரன்களை குவித்தாலும் அதை குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து தடவலாக பேட்டிங் செய்து வரும் அவர் நிறைய விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

- Advertisement -

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த போட்டியில் 176.92 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியும் எதிரணி பேட்ஸ்மேன்கள் அதை விட முரட்டுத்தனமான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியதால் அவரது ஆட்டம் செல்லுபடியாகவில்லை. அதை விட ஆரம்பத்தில் அதிரடியாக செயல்பட்டு முதல் 44 பந்துகளில் 80* ரன்கள் எடுத்த அவர் சதமடிக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் தடவலாக பேட்டிங் செய்து அடுத்த 16 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ஒருவேளை அந்த சமயத்தில் சதமடிக்க வேண்டும் என்ற சுயநலத்துடன் இல்லாமல் தொடர்ந்து அதே வேகத்தில் பேட்டிங் செய்திருந்தால் பெஷாவர் அணி கடைசியில் வெற்றி பெற்றிருக்கலாம். அப்படி சுயநல எண்ணத்துடன் பேட்டிங் செய்ததால் சதமடித்தும் என்ன புண்ணியம் என்ற வகையில் பாபர் அசாம் தனது சதத்துக்காக விளையாடாமல் அணிக்காக விளையாட வேண்டும் என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இந்த போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்ட அவர் இது பற்றி நேரலையில் பேசியது பின்வருமாறு. “நீங்கள் நெருப்பாக பேட்டிங் செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில் கடந்த சில நிமிடங்களாக பவுண்டரி அடிப்பதை தவிர்த்து மற்ற அனைத்தையும் செய்து வருகிறீர்கள். சதங்கள் என்பது சிறப்பானது, புள்ளி விவரங்கள் அபாரமானது. ஆனால் நீங்கள் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதால் அணி தான் உங்களுக்கு முதலில் வரவேண்டும்” என்று விமர்சித்தார்.

இதையும் படிங்க:IND vs AUS : டிராவிட் மற்றும் சுனில் கவாஸ்கரை பின்னுக்கு தள்ளி வரலாறு படைக்க காத்திருக்கும் – விராட் கோலி

முன்னதாக சதமடித்து தன்னை நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக நிரூபிக்க வேண்டும் என்பதற்காக தார் ரோட் போன்ற பிட்ச்களை பாபர் அசாம் தான் அமைக்க சொல்கிறாரா? என்று கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சைமன் டௌல் வெளிப்படையாக விமர்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement