யார் இந்த சிமர்ஜீத் சிங் ? பெயர் தெரியாத இவர் இந்திய அணியில் தேர்வாக என்ன காரணம் ? – விவரம் இதோ

Simarjeet-1
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியை நேற்று முன்தினம் அறிவித்திருக்கிறது பிசிசிஐ. 20 முன்னணி வீரர்கள் கொண்ட இந்த அணியில், கூடுதலாக 5 நெட் பவுலர்களும் இடம்பிடித்து அசத்தியிருக்கின்றனர். இந்த 5 வீரர்களில் இஷான் போரல், சந்தீப் வாரியர், சாய் கிஷோர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய வீரர்கள் ஐபிஎல் தொடரின் மூலமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமாகியிருக்கின்றனர். ஆனால் மற்றொரு வீரராக இடம்பிடித்து இருக்கும் சிமர்ஜீத் சிங் யாரென்று பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியாது என்பதால் அவரைப் பற்றி தற்போது இணையதளத்தில் தேடிக்கொண்டு வருகின்றனர்.

Simarjeet

- Advertisement -

யார் இந்த சிமர்ஜீத் சிங்? ஐபிஎல் தொடரில் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படாத அவரை, இந்திய அணியின் நெட் பவுலராக தேர்வு செய்யும் அளவிற்கு அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை இந்த பதிவில் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். 23 வயதுடைய வலது கை வேகப் பந்து வீச்சாளரான் சிமர்ஜீத் சிங், உள்ளூர் போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற விஜய் ஹசாரே ட்ராபியல் டெல்லி அணியில் அறிமுகமான இவர், அதே ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபி தொடரிலும் அந்த அணியில் இடம் பிடித்து அசத்தினார்.

குறைந்த எகானமி ரேட்டில் பந்து வீசி அசத்தியதால் அவருக்கு டெல்லி அணியால் தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தது. கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக பந்து வீசிய அவருக்கு இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெறும் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாட கடந்த 2019ஆம் ஆண்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. அனைத்து தொடர்களிலும் அவர் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், இந்திய அணியில் அவருக்கான இடத்தைப் பெற்றுத் தந்தது 2020-2021க்கான விஜய் ஹசாரே ட்ராபி தொடர்தான்.

simarjeet 2

இந்த தொடரில் 7 போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடிய அவர் 11 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதோடு மட்டுமல்லாமல் 5.65 என்ற மிகச் சிறந்த எகானமி ரேட்டில் பந்து வீசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியருந்தார். அந்த சீசினில் டெல்லி அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியிலில் 2வது இடம் பிடித்ததும் சிமர்ஜீத் சிங்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வீரர்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தி வரும் பிசிசிஐ, ஐபிஎல் தொடரில் விளையாடாத ஒரு இளம் வீரருக்கு இந்திய அணியில் வாய்ப்பளித்திருப்பது பாரட்டுதலுக்குறிய ஒரு விடயமாகவே பார்க்கப்படுகிறது.

simarjeet 3

இலங்கை செல்லவிருக்கும் இந்திய அணியானது அங்கு சென்றப் பின்னர், முதலில் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி விட்டு அடுத்ததாக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர்களுக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் வீரர்கள் அனைவரையும் இன்னும் இரண்டு நாட்கள் கழித்து மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் இரண்டு வாரங்கள் தனிமைப் படுத்தும் முடிவை எடுத்துள்ளது பிசிசிஐ.

Advertisement